[X] Close

மாட்டிறைச்சி சாப்பிட்டதால் தாக்குதல்: மத்திய அரசால் தான் இத்தகைய செயல்கள் நடக்கின்றன- கார்த்தி சிதம்பரம்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 13:06 pm
  • அ+ அ-

மாட்டிறைச்சி உண்டதால் இளைஞர் மீது தாக்குதல் நடந்ததை அடுத்து, மத்திய அரசு அளிக்கும் தைரியத்தால் தான் இத்தகைய செயல்கள் நடக்கின்றன என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மொகமது ஃபைசான். இவர் மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில், பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (28), அகத்தியன் (29), கணேஷ் குமார் (27) மற்றும் மோகன்குமார் (28) ஆகியோர் ஃபைசானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், மரக்கட்டைகளாலும் இரும்புக் கம்பிகளாலும் ஃபைசான் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஃபைசான் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கீழ்வேளூர் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது கொலை முயற்சி, ஆயுதங்களால் தாக்குதல், பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் பாரபட்சமின்றிக் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரிடம் மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகள் மனு அளித்தன.

இந்நிலையில் மாட்டிறைச்சியை உட்கொண்டதற்காக மொகமது ஃபைசான் தாக்கப்பட்டதற்கு சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஒருவகையான உணவை அருந்தினால் அதற்குத் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதெல்லாம் நடப்பதற்குக் காரணம் மதவாத சக்திகள் தலை தூக்குவதால்தான். மதவாத சக்திகளுக்கு ஆதரவாக மத்தியில் உள்ள அரசு செயல்படுகிறது என்ற தைரியத்தில்தான் இவ்வாறு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் இத்தகையை போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாநில அரசு அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். இத்தகைய சம்பவங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார் கார்த்தி சிதம்பரம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close