[X] Close

திறமை இருந்தால் வேலை உறுதி!- பொறியியல் மாணவர்களுக்கு ஆர்.ராஜாராம் அறிவுரை


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 10:08 am
  • அ+ அ-

மனிதர்களின் படிப்படியான வளர்ச்சியில் பொறியியல் துறை முக்கியப் பங்காற்றுகிறது. நவீன காலத்தில் மனித வாழ்க்கையின்  அனைத்துப் பிரிவுகளிலும் இன்றியமையாததாகிவிட்டது பொறியியல் துறை. நாட்டின் வளர்ச்சியில் பொறியியலின் பங்கு மகத்தானது. பொறியியல் துறையில் நிறைவான வேலைவாய்ப்புகள் உள்ளன” என்கிறார் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள கொண்டம்பட்டியில் செயல்படும் ஸ்ரீஈஸ்வர் பொறியியல் கல்லூரியின் இயக்குநரும், கல்வியாளருமான ஆர்.ராஜாராம்.

இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர்  25 வயதுக்கும், 65 சதவீதம் பேர் 35 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். சர்வதேச அளவில் ஆற்றல் மிக்க நாடான இந்தியாவை, மனித வளத்துக்காக பல நாடுகளும் சார்ந்துள்ளன. இதனால், பொறியியல் கல்வி பயிலும் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக கல்வியாளர் ஆர்.ராஜாராமிடம் பேசினோம்.

“வெளிநாட்டு கார் நிறுவனமான ஸ்கோடா மற்றும் ஃவோக்ஸ்வேகனின் ஆராய்ச்சி நிறுவனம் புனேவில் ரூ.2,000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. அப்போது பேசிய அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி குருபிரதாப் போப்பராய், இந்தியாவில் சிறந்த பொறியியல் பல்கலைக்கழகங்களும், பொறியியல் கல்லூரிகளும் இருப்பதால்,  திறமையான இளைஞர்கள் 250 பேரை ஆராய்ச்சிப்  பணிகளில் ஈடுபடுத்தி, கார் உற்பத்தியை அதிகரிக்கும் முனைப்புடன் இருப்பதாக தெரிவித்தார்.

வெளிநாட்டு நிறுவனங்கள்...

பல மேலைநாடுகள், தங்களது நிறுவனங்களை தற்போதே இந்தியாவுக்கு மாற்றத்  தொடங்கியுள்ளன. அமெரிக்கா,  ஜப்பான், ஜெர்மனி, நியூசிலாந்து, கத்தார், மலேசியா, நெதர்லாந்து, சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள், இந்திய பொறியாளர்களை பணிக்கு  அமர்த்துவதில் ஆர்வம் காட்டுகின்றன.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 7.3 சதவீதம் இருப்பதால், 2030-ல் சைனா, அமெரிக்காவுக்கு அடுத்து, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் வாய்ப்புள்ளது. அப்போது பொறியியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு...

அதேசமயம், பொறியாளர்களுக்கு திறன் மேம்பாடு என்பது முக்கியமாக கருதப்படுகிறது. திறமையான பொறியாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. செயற்கை நுண்ணறிவு, இணையவழி செயல்கள், ஆக்மண்டட் ரியாலிட்டி, வெர்ச்சுவல் ரியாலிட்டி, புள்ளி விவரங்கள், இயந்திரங்கள் மூலம் கற்பது, செல்போன் செயலிகள், ரோபோடிக்ஸ் ஆகிய பிரிவுகளில் திறன்களை வளர்த்தால், அதிக  வேலைவாய்ப்புகளை பெறமுடியும்.

செயற்கை நுண்ணறிவு துறை ஆண்டுக்கு 30 சதவீதம் வளர்ச்சி பெற்று வருகிறது. 2020-ல் புதிதாக சுமார் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் இப்பிரிவில் உருவாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. போக்குவரத்துத் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் பொறியாளர்களின் தேவை பன்மடங்கு பெருகும்.

செல்போன்கள் உபயோகத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கிராமங்களில்கூட செல்போன் மற்றும் இணையப் பயன்பாடு நடைபெறுகிறது. வங்கி, மருத்துவம், விமான சேவை என அனைத்துத் துறைகளும் அதிநவீனமயமாகின்றன. எலிகளைப் பிடிக்கக்கூட நவீன பொறியியல் கருவிகள் வந்துவிட்டன. சென்சார் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

அதிகரிக்கும் தொழில்நுட்ப உபகரணங்கள்!

சிறிய இயந்திரங்கள் மூலம், தானாக இயங்கும் கதவுகள், மின் சாதனங்கள், பாதுகாப்பு சாதனங்கள், கேமராக்கள், திரைசீலைகள் என்று தொழில்நுட்பம் வளரும் நிலையில், இவற்றைப் பராமரிக்க பொறியாளர்கள் அதிகம்  தேவைப்படுகின்றனர். இதேபோல, ஆக்மெண்டட் ரியாலிட்டி மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி (மிகை யதார்த்தம் மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பம்) ஆகியவற்றின் வளர்ச்சியும் அபரிமிதமாக உள்ளது. தொழிற்சாலைகள், பொழுதுபோக்கு நிறுவனங்களில் இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் 9 துறைகளில் இவை வியக்கத்தக்க மாற்றத்தை உருவாக்கப்போகின்றன.

வீடியோ விளையாட்டுகள், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், உடல்நலம் சார்ந்த துறைகள், வீடு,  நிலம் மற்றும் கட்டிடங்கள் துறை, சில்லறை வணிகம், கல்வி, பொறியியல் துறை, ராணுவம்,  பொழுதுபோக்கு துறை தொழில்நுட்பத்தில் செய்யப்படும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

வருங்காலத்தில்  5-ஜி தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படும்போது, ஆக்மெண்டட் ரியாலிட்டி மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும்.

தகுதியை உயர்த்துவது அவசியம்...

இவ்வாறு பொறியியல் துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் செய்ய  வேண்டியது ஒன்றுதான். வெறுமனேபாடப் புத்தகங்களைப் படிப்பது மட்டுமின்றி,

பல் துறைகளில் தங்களது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புகள் தேடி வரும் அளவுக்கு தகுதியை உயர்த்திக்கொள்வது அவசியம். ஒவ்வொரு நாளும் புதிதாக வரும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதுடன், அவற்றைப் பயன்படுத்தவும் தெரிந்துகொள்ள வேண்டும். தகவல் பரிமாற்றத் திறன், மொழித் திறன் என அனைத்திலும் தேர்ச்சிபெற வேண்டும்.

இந்திய இளைஞர்கள் சரியானபடி திட்டமிட்டால், உலகை ஆளும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை. கலாம் கணித்தபடி நம்நாடு வல்லரசாகும். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மூலமாக கிடைக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி, உயர்ந்த நிலையை அடையலாம்.

தற்போது உலகப் பொருளாதாரம் 3 சதவீதம் முதல் 3.5 சதவீதம் உள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரம் 7 முதல் 7.2 சதவீதத்தை அடைந்துளளது. அடுத்த 2, 3 ஆண்டுகளில் அதிக சம்பளம் கொண்ட வேலைவாய்ப்புகள்  அதிகரிக்கும்.பொறியியல் கல்வி மட்டுமின்றி, நவீன தொழில்நுட்பங்களைக் கற்பது மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை தரும்.

1970, 1980-களில் ஒருவர் வேலைக்கு சேரும்போது 2, 3 வருடங்கள் தற்காலிகப்  பணியில் அமர்த்தி,  பிறகு நிரந்தரப் பணியாளர்களாக மாற்றுவார்கள். தற்போது கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போதே, பணிக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கும் அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

கட்டிடவியல், இயந்திரவியல் துறை சார்ந்த மாணவர்கள், இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்வி பயிலும்போதே, நேரம் கிடைக்கும்போது அருகில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடக்கும் கட்டிடங்களுக்குச் சென்று பயிற்சி பெற்றால், கல்லூரி இறுதியாண்டு முடிக்கும்போதே தொழில்முனைவோராக மாறலாம். வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பங்கள் லட்சக்கணக்காண பொறியாளர்கள்  தேவையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இளம் பொறியாளர்கள் திறனை மேம்படுத்தி, சிறந்த வேலைவாய்ப்புகளை பெறமுடியும்” என்றார் நம்பிக்கையுடன்

ஆர்.ராஜாராம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close