[X] Close

மேற்கு கோபுரம் வரை நீண்ட பக்தர்கள் வரிசை: போலி நுழைவுச் சீட்டு குறித்து ஆட்சியர் எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 10:01 am
  • அ+ அ-

அத்திவரதர் எழுந்தருளும் வைபவத்தின் 12-ம் நாளான நேற்று அத்திவரதர் காவி நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அத்திவரதரை தரிசிக்க செல்லும் பக்தர்களின் வரிசை, சுமார் 4 கிமீ தூரத்துக்கு மேற்கு கோபுரத்துக்குச் செல்லும் வழிவரை நீண்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகள் கழித்து அத்திவரதர் தரிசனம் அளித்து வருகிறார். இவரை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் கோயில் அருகே பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பகல் 1 மணியுடன் பொது தரிசனம் நிறுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதனால் அதிகாலை தொடங்கி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். பொது தரிசனத்துக்கு கிழக்கு கோபுரத்தின் வழியாக உள்ளே செல்ல வேண்டிய பக்தர்கள் வரிசை மேற்கு கோபுரத்துக்கு செல்லும்வழிவரை நீண்டது. மேலும், பொதுதரிசனம் 10 மணியுடன் முடித்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும், 12 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

போலி அனுமதி சீட்டுகள்

முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டுகளைப் போல் போலி அனுமதி சீட்டுகளை பலர் வைத்துக்கொண்டு தரிசனத்துக்கு வந்தனர். வெளிநாட்டினர் இருவர் கொண்டு வந்த அனுமதிச் சீட்டுகள் போலி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த பிறகு, அவர்களை தரிசனத்துக்கு அனுமதித்த அதிகாரிகள் மற்றும் போலீஸார், அந்த அனுமதிச் சீட்டை வழங்கியது யார்என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதுபோல் ஏற்கெனவே கர்நாடகத்தில் இருந்து போலி அனுமதிச் சீட்டை எடுத்துக்கொண்டு 6 பேர் வந்திருந்தனர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து இதுபோல் போலி அனுமதி சீட்டை சிலர் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: முக்கிய பிரமுகர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் வழங்கும் அனுமதிச் சீட்டை சிலர் கலர் ஜெராக்ஸ் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்து வரும் பக்தர்களை இதுபோல் ஏமாற்றி வருகின்றனர். போலி அனுமதி சீட்டை விற்பவர்கள் யார் என்று கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்யப்படுவார்கள். இந்த அனுமதிச் சீட்டு நன்கொடையாளர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. வெளியில் விற்கும் இதுபோன்ற அனுமதிச் சீட்டுகளை யாரும் பணம் கொடுத்து வாங்க வேண்டாம். அவை ஸ்கேன் செய்யப்படும்போது போலி என்பது தெரிந்துவிடும் என்றார். இந்நிலையில் நேற்று பாஜகவின் தேசிய செயலர் எச்.ராஜா அத்திவரதரை தரிசித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close