[X] Close

சட்டப்படி கடமைகளை நிறைவேற்றும் போலீஸாரை மிரட்ட வழக்கு தொடர்வோரை அடக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:30 am
  • அ+ அ-

சட்டப்படி கடமைகளை நிறைவேற்றும் போலீஸாரை மிரட்டும் வகையில் வழக்கு தொடர்வோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த எஸ்.சந்திரன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

சொத்துப் பிரச்சினை தொடர்பான விவகாரத்தில், என் மீது அடுத்தடுத்து குற்ற வழக்குகளை பதிவு செய்கின்றனர். இதற்கு காரணமான சிவகங்கை தாலுகா காவல் நிலையஆய்வாளர் பொன்ரகு, சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் வழக்கு பதிவு செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வோம் என்றும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் மிரட்டும் போக்கு அதிகமாக உள்ளது. வழக்கில் தொடர்புள்ளவர்களும், அவர்களின் உறவினர்களும் இந்த செயல்களில் ஈடுபடுகின்றனர்.

குற்ற வழக்கில் தொடர்புள்ளவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவிக்காது. வழக்குப் பதிவு செய்வதில் விதிமீறல் இருந்தால் மட்டுமே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும்.

அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி வரையறுக்கப்பட்ட தங்களது பொறுப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். போலீஸார் 365 நாட்களும் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு குறிப்பிட்ட பணி நேரம் கிடையாது. மன அழுத்தத்தில் உள்ள காவல் துறையினரை நீதிமன்றம், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும்.

போலீஸார் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வெற்றுக் குற்றச்சாட்டுகள் போதுமானது இல்லை. குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள், ஆவணங்களை தாக்கல் செய்தால் மட்டுமே உரிய உத்தரவு பிறப்பிக்க முடியும். சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் போலீஸாரை மிரட்டும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

குற்ற வழக்குகளில் தொடர்புஉள்ளவர்கள் உள்நோக்கத்துடன், வெற்றுக் காரணங்களுடன் போலீஸாரை மிரட்டும் வகையில் தாக்கல் செய்யும் மனுக்களை அதிகபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நேர்மையான அதிகாரிகளுக்கு விருது கொடுத்து பாராட்டினால் அவர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தங்கள் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றுவார்கள். நேர்மையான போலீஸ் அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரருக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையிலான சொத்து பிரச்சினை அடிதடியில் முடிந்துள்ளது. இதனால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மனுதாரர் சட்டப்படி சந்திக்க வேண்டும். இதனால் மனுதள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close