[X] Close

சிவகங்கை அருகே பேனர் கிழித்தவரை கண்டுபிடிக்க கோயிலில் ஒரு கிராமமே சத்தியம் செய்த விநோதம்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:31 am
  • அ+ அ-

சிவகங்கை அருகே கோயில் விழாவில் பேனர்களை கிழித்தவர்களை கண்டுபிடிக்க வீட்டுக்கு ஒருவர் வீதம் ஒரு கிராமமே கோயிலில் சத்தியம் செய்த விநோதம் நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே விளங்குடி சந்தன மாரியம்மன் கோயிலில் ஜூலை 11-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்க காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.ராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி கிராம முக்கியப் பிரமுகர்கள் சார்பில் ஐந்து இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. அந்த பேனர்களை கும்பாபிஷேகத்துக்கு முந்தைய நாள் இரவு சிலர் கிழித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், பேனர்களை கிழித்தவர்களைக் கண்டுபிடிக்க கும்பாபிஷேகம் முடிந்ததும் கிராம கூட்டத்தைக் கூட்டினர்.

விசாரணை நடத்தியும் பேனர்களை கிழித்தவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் காளையார் கோவில்அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில்`பேனரை கிழிக்கவில்லை' எனக் கூறி சூடத்தில் சத்தியம் செய்ய வேண்டுமென பஞ்சாயத்தார் முடிவுசெய்தனர். மேலும் இதில்வீட்டுக்கு ஒருவர் கண்டிப்பாககலந்து கொள்ள வேண்டுமெனத்தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று அனைவரும் ஒரு பேருந்தில் கொல்லங்குடி கோயிலுக்குச் சென்றனர். சுவாமி சன்னதி முன்பாக சூடத்தை ஏற்றி ஒவ்வொருவராக சத்தியம் செய்தனர். பேனர் கிழிக்கப்பட்ட சம்பவத்துக்காக ஒரு கிராமமே கோயிலில் சத்தியம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close