[X] Close

வளர்ச்சிக்கான திட்டங்களை கண்டறியுங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம் கடிதம்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:16 am
  • அ+ அ-

மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களை கண்டறிந்து அரசுக்கு தெரியப்படுத்துவதுடன், மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:சட்டம் மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில நிர்வாகத்தின் கண்கள் மற்றும் காதுகளாக செயல்படுபவர்கள் மாவட்ட ஆட்சியர்கள். அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், மக்களுக்காக கொள்கைகளை உருவாக்குபவர்களுக்கு எடுத்துக் கூறியும் வருகின்றனர்.

நாடு சுதந்திரமடைந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் பலர் குடிசையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு வீடு, போதிய சாலை, குடிநீர், தெரு விளக்கு ஆகியவை உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்பதே முதல்வரின் முக்கிய நோக்கமாகும். இவற்றுக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அதன்படி, ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் வாழும் மக்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் குறைதீர்வு நாள் உள்ளிட்ட நிகழ்வுகளின் மூலம் சந்தித்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் நடவடிக்கைகளை மேம்படுத்தி, வறுமை ஒழிப்பு திட்டம் மூலம் கிராம தொழில், சிறு தானியங்களில் மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரித்தல், துணிப்பை தயாரித்தல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள குடிசைகளை அகற்றி, அதில் வாழ்பவர்களுக்கு தேவையான வீடுகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் கட்ட ஆட்சியர்கள் உதவிபுரிய வேண்டும். நீர் மேலாண்மை மூலம் நீராதாரங்களை பாதுகாப்பதுடன், மக்கள் பங்களிப்புடன் கூடிய குடிமராமத்து திட்டத்தின் கீழ், குளங்கள், கால்வாய்கள், குட்டைகள் மற்றும் வரத்துக் கால்வாய்களை தூர்வார வேண்டும். இதில், தனியார் பங்களிப்பை ஊக்குவித்து, நீர் ஆதாரங்களை வளப்படுத்த வேண்டும்.

அரசின் தன்னிறைவு சிறப்பு திட்டங்களின் பயன்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம், பயிர்க் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும், தொழில் சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்தி, அதிகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இதுதவிர, ஆட்சியர்கள் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான முக்கியமான திட்டங்களை கண்டறிந்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிறைவேற்ற வேண்டும். இவ்வாறான முக்கியத் திட்டங்களை செயல்படுத்தும் போது, தடையாக இருக்கும் நில எடுப்பு உள்ளிட்ட சிக்கல்களை உடனடியாக களைய வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close