[X] Close

தமிழை ஒழித்துக்கட்ட நினைப்பவர்களுக்கு எதிரான போராட்டத்துக்கு ‘தமிழாற்றுப்படை’ ஓர் ஆயுதமாக இருக்கும்: நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் கருத்து


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:13 am
  • அ+ அ-

தமிழை ஒழித்துக்கட்ட நினைப்பவர்களுக்கு எதிரான போராட்டத்துக்கு ‘தமிழாற்றுப்படை’ நூல் ஓர் ஆயுதமாக இருக்கும் என்று வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து ‘தமிழாற்றுப்படை’ என்ற பெயரில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு, நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நூலாக வெளியிடப்பட்டது. இந் நூலின் முதல் பிரதியை திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். இதன் ஒலிப்புத்தகத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி விமலா பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :வட இந்திய ஆதிக்கத்தை திட்டமிட்டு இங்கே கொண்டுவர ஒரு கூட்டம் துடித்துக்கொண்டிருக்கிறது. அதை எதிர்க்கும் வலிமையாக இந்த‘தமிழாற்றுப்படை’ புத்தகத்தை பார்க்கிறேன். ‘கருணாநிதி இல்லாமல் வெளிவரும் நூல் இது. ஆனாலும் இந்த நூலுக்குள் கருணாநிதி இருக்கிறார்!’ என வைரமுத்து இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இந்த நூலில் மட்டுமா இருக்கிறார். வைரமுத்துவின் நெஞ்சிலும் இருக்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளாக கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும், அதிகாரம் கையில் இருந்தாலும் இல்லையென்றாலும் அவரது கைகளால் புத்தகத்தை வெளியிடுவதைத்தான் வைரமுத்து விரும்பியிருக்கிறார். இதுபோன்ற ஒரு மேடையில் இன்று நான் இருப்பதும் மகிழ்ச்சி. கருணாநிதியின் திரைத்துறை பயணத்தை இந்த நூலில் ஒரு ரசாயனப் பதிவாக அளித்திருக்கும் விதம் சிறப்பு. கவிஞராக, திரைப்பட பாடலாசிரியராக தான் எடுத்து வைக்கும் எந்த துறையிலும் தனித்து உயரம் அடைகிற மனிதராகத்தான் அவரை பார்த்து வருகிறேன். சரியான நேரத்தில் இந்த நூல் வெளிவருகிறது.

திராவிட இனத்தின் பெருமையை சிதைக்க ஒரு கூட்டம் திரிகிறது. அவர்களுக்கு இந்நூல் பதிலாக இருக்கும். அதோடு, தமிழ் இனத்துக்கும், மொழிக்கும் ஆபத்தை விளைவிக்கும் திட்டங்களை மத்திய அரசுமுன்னெடுத்து வருகிறது. தமிழை ஒழித்துக்கட்டவும் நினைக்கிறது. நாம் தற்போது அதற்கு எதிராக போராட வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம். இந்த போராட்டத்துக்கு தமிழாற்றுப்படை நூல் ஓர் ஆயுதமாக இருக்கும்!இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, “தமிழாற்றுப்படை ஒரு வரலாற்று நூல் அல்ல, திறனாய்வு நூல் அல்ல. ஆக, இந்த நூல் வழியேவைரமுத்து வேறு என்னதான் சொல்லவருகிறார் என்பதை பார்க்கிறேன். இதை ஒரு நாகரிகத்தின் அடையாளமாகத்தான் பார்க்கிறேன். நிலம், மொழி, இனம் இது மூன்றும்தான் நாகரிகம். மொழியும், நிலமும் வேறுவேறு அல்ல. ஒரு மொழி அழிந்தால் அந்த இனம் அழியும். இந்தியை தவிர நாட்டில் உள்ள மற்ற மொழிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. நமக்கு ஆபத்து என்றால் நாம் கலகம் செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். யுத்தத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்!’’ என்றார்.

நிறைவாக கவிஞர் வைரமுத்து ஏற்புரை நிகழ்த்தினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close