[X] Close

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வந்தது குடிநீர் ரயில்


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 12:43 pm
  • அ+ அ-

ஜோலார்பேட்டையில் இருந்து  25 லட்சம் லிட்டர் குடிநீர் வேகன்களைச் சுமந்துவந்த ரயில் வெற்றிகரமாகச் சென்னையை வந்தடைந்தது.

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையைப் போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீரை ரயில் மூலம் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ.65 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 21-ம் தேதி காவிரி கூட்டுக்குடிநீரை சென்னைக்கு எடுத்துச்செல்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு முடிவடைந்தன.

இதையடுத்து, ஜூலை 10-ம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு தண்ணீரை கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, உடைப்பை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணிகள் முடிந்த பிறகு 2-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதைத் தொடர்ந்து, நள்ளிரவு 1 மணியளவில் பார்ச்சம்பேட்டைக்கு குடிநீர் வந்தடைந்தது. பிறகு, ரயில் வேகன்களில் குடிநீர் நிரப்பும் பணி தொடங்கியது.

நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணியளவில் அனைத்து வேகன்களிலும் குடிநீர் நிரப்பப்பட்டது. இதையடுத்து, 50 வேகன்களிலும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்ல 5-வது யார்டில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை பெருநகர்குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் ஒப்புதல் வந்தவுடன் சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது.

காலை 7 மணியளவில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் புறப்பட்ட நிலையில், மதியம் சுமார் 12 மணி அளவில் வில்லிவாக்கத்தை வந்து சேர்ந்தது. வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து குழாய்கள் மூலமாகக் குடிநீர், கீழ்ப்பாக்கம் கொண்டு செல்லப்படும்.

அங்கேயுள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படும். சுத்திகரிப்புக்குப் பின், கீழ்ப்பாக்கத்தில் இருந்து லாரிகள் மூலமாக குடிநீர் சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close