[X] Close

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு செல்ல தயார் நிலையில் குடிநீர் நிரப்பிய ரயில் வேகன்கள்


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 08:01 am
  • அ+ அ-

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் வேகன்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல் வந்தவுடன் குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையைப் போக்கவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீரை ரயில் மூலம் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ.65 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 21-ம் தேதி காவிரி கூட்டுக்குடிநீரை சென்னைக்கு எடுத்துச்செல்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நேற்று முன்தினம் முடிவடைந்தன. இதையடுத்து, ஜூலை 10-ம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு தண்ணீரை கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, உடைப்பை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணிகள் முடிந்த பிறகு 2-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதைத் தொடர்ந்து, நள்ளிரவு 1 மணியளவில் பார்ச்சம்பேட்டைக்கு குடிநீர் வந்தடைந்தது. பிறகு, ரயில் வேகன்களில் குடிநீர் நிரப்பும் பணி தொடங்கியது.

நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணியளவில் அனைத்து வேகன்களிலும் குடிநீர் நிரப்பப்பட்டது. வேகன்களின் முழுகொள்ளளவு வரை குடிநீர் எடுத்துச்செல்ல அனுமதி இல்லாததால், ஒவ்வொரு வேகன்களில் இருந்தும் 4 ஆயிரம் லிட்டர் குடிநீர் மீண்டும் வெளியேற்றப்பட்டது.

இதையடுத்து, 50 வேகன்களிலும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்ல 5-வது யார்டில்தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர்குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் ஒப்புதல் வந்தவுடன்சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் பரிசோதனை

இதுகுறித்து குடிநீர் வடிகால்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணியில்200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பார்ச்சம்பேட்டை 5-வது யார்டில் தண்ணீர்நிரப்பப்பட்ட வேகன்கள் தயார் நிலையில் உள்ளன. தினசரி 4 முறைரயில் வேகன்களில் குடிநீர் எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

எங்களை பொருத்தவரை ஜோலார்பேட்டையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டன. குடிநீர் தரத்தை பரிசோதனை செய்ய5-வது யார்டு அருகே ‘தண்ணீர் பரிசோதனை நிலையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒவ்வொரு முறையும் குடிநீர் சென்னைக்கு செல்லும்போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ‘பேரா மீட்டரை'கொண்டு பரிசோதனை செய்வார்கள். அதன் பிறகே வேகன்களில் ஏற்றப்படும்.

சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் இருந்து முறையாக அனுமதிகிடைத்தவுடன் ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படும். இன்று (நேற்று) முதல் நாள் என்பதால் ஒரு முறை மட்டுமே தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்படும். அடுத்தடுத்த நாட்களில் 4 முறை குடிநீர்கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close