[X] Close

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்: துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல்


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 07:57 am
  • அ+ அ-

முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற தொழில், குறு, சிறு,நடுத்தரத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்ற ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ நாவலர் நெடுஞ்செழியனின் பிறந்த நாள் நூற்றாண்டு வருகிறது. வேலூரில் அவரது மேடைப் பேச்சால் ஈர்க்கப்பட்டுத்தான் நான் திமுகவில் இணைந்தேன். கடைசிவரை திராவிட இயக்க கொள்கையில் உறுதியாக இருந்தவர். தமிழகம் முழுவதும் தமிழ்முழக்கம் செய்த தமிழ் மேதை.

‘தம்பி வா.. தலைமையேற்க வா’ என்று அண்ணாவால் அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். எனவே, நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவில் அவருக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்” என்றார்.

அவருக்குப் பதிலளித்த துணைமுதல்வர் ஓபிஎஸ், ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என போற்றப்படும் நாவலர் நெடுஞ்செழியன் குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் கூறிய அனைத்தையும் நான் ஆமோதிக்கிறேன். தனது பேச்சாற்றலால் தமிழகத்து இளைஞர்களை ஈர்த்த அவரது சிறப்புகளை நாங்கள் அறிவோம். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மட்டுமல்ல ஜெயலலிதாவுக்கும் பக்கபலமாக இருந்தவர்.

நாவலர் மறைவுக்குப் பிறகு அவரதுமனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் ஜெயலலிதாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததையும் நாங்கள் அறிவோம். நாவலரின் நூற்றாண்டு விழா வருவதையொட்டி இதுதொடர்பாக முதல்வருடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். நாவலர் நெடுஞ்செழியனின் பிறந்த நாள் நூற்றாண்டு அரசு விழாவாகக் கொண்டாடப்படும். அதற்கான விழாவில் நாவலருக்கு பெருமை சேர்க்கும் வகையிலான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close