[X] Close

மாணவி ஜீவிதாவுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளேன்: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 08:00 am
  • அ+ அ-

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்த தையல் தொழிலாளி பன்னீர்செல்வம் மகள் ஜீவிதா. சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ள இவருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உதவியது குறித்து ‘இந்துதமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக, மாணவி ஜீவிதா கூறியது, ‘மருத்துவ செலவை தமிழிசை ஏற்கவில்லை’ என்ற தலைப்பில் கடந்த 10-ம் தேதி செய்தி வெளியானது.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் அளித்துள்ள விளக்கம்:

மாணவி ஜீவிதாவின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்பதாக வாக்களித்த நான்அவ்வாறு செய்யவில்லை என்பதாக அவர் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

தையல் தொழிலாளியின் மகளான ஜீவிதா, அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற செய்தி அறிந்ததும், அவரது வீட்டுக்கு நேரில் சென்று ரூ.50 ஆயிரம் வழங்கினேன். இந்தச் செய்தியும் ‘இந்து தமிழ்’ நாளிதழில் வந்துள்ளது. மருத்துவக் கல்விச் செலவை ஏற்பதாக நான் கூறியது உண்மைதான்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் தவணைக் கல்விக் கட்டணத்துக்கும் அதிகமாகவே நான் அவருக்கு பணம் கொடுத்துள்ளேன். அவர் விடுதியில் சேர்ந்தால் விடுதிக்கான கட்டணம், புத்தகச் செலவு உள்ளிட்ட பிற செலவுகள் எவ்வளவு ஆகும் என்பது அவருக்கு இனிமேல்தான் தெரியவரும். அதை அவர் தெரியப்படுத்திய பிறகு, அந்த பணத்தை கொடுப்பதற்கும் நான் தயாராகவே இருந்தேன்.

இந்நிலையில், கல்விக் கட்டணத்துக்கான தவணையைவிட நான் அதிகமான பணம் கொடுத்ததை அந்த மாணவியின் வார்த்தைகளிலேயே ஒப்புக்கொண்ட பிறகும், ‘மருத்துவ செலவை தமிழிசை ஏற்கவில்லை’ என ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது, என்னை மிகவும் மனவேதனையடைய செய்தது. இது எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாத செய்தி என்பதைதெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

வருந்துகிறோம்

மருத்துவக் கலந்தாய்வுக்கு வந்த மாணவி ஜீவிதா கூறிய தையே நமது நாளிதழில் வெளி யிட்டிருந்தோம். மற்றபடி இந்தச் செய்தியை வெளியிட்டதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. இருப்பினும், பரந்த உள்ளத்தோடு உதவ முன்வந்த தமிழிசை சவுந்தரராஜனின் உள்ளம் புண்படுமாறு வெளி யான இந்தச் செய்திக்காக மிகவும் வருந்துகிறோம்.

- ஆசிரியர்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close