[X] Close

காலாவதி குளிர்பானங்களால் கதிகலங்கும் பொதுமக்கள்: உணவுப் பாதுகாப்புத்துறை கடும் நடவடிக்கை எடுக்குமா?


expired-soft-drinks

கோவை காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் | படம்: ஜெ.மனோகரன்

  • kamadenu
  • Posted: 30 Jun, 2018 15:57 pm
  • அ+ அ-

பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் விலைக்கு குளிர்பானங்கள் விற்கப்படுவதுடன், காலாவதியான பொருட்களும் விற்பனையாவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் தற்போதைய காலகட்டத்தில் ஏராளமானோர் குளிர்பானங்களை அதிகம் பருகுகின்றனர்.

இது குறித்து கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பு தலைவர் சி.எம்.ஜெயராமன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கோவை மத்திய பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், பிரபல வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (எம்.ஆர்.பி.) காட்டிலும், கூடுதல் விலைக்கு விற்கின்றனர். கேட்டால் ஃபிரிட்ஜில் வைத்திருப்பதால் கூடுதல் விலைக்கு விற்கிறோம் என்கின்றனர். குளிர்பான பாட்டிலிலேயே அதிகபட்சம் எவ்வளவு விலைக்கு விற்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள நிலையில், அதைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. அதேபோல, காலாவதியான குளிர்பானங்களையும் விற்பனை செய்கின்றனர். பயண அவசரத்தில் பொதுமக்கள் அதைப் பார்க்காமல் வாங்கிச் செல்கின்றனர்.

பிரபல நிறுவனங்களின் பெயர்களில் போலி குளிர்பானங்களையும் விற்பனை செய்கின்றனர். தூக்கியெறியும் பாட்டில், டப்பாக்களின் ஸ்டிக்கர்களை பிய்த்து வேறு பாட்டிலில் ஒட்டி, போலி குளிர்பானத்தை அதில் ஊற்றி விற்கின்றனர்.

இதுதவிர, ‘பிரட்’ உள்ளிட்ட பொருட்களில் உற்பத்தி தேதியை முன்கூட்டியே பிரிண்ட் செய்து, விற்கின்றனர். இவற்றைச் சாப்பிடும், பருகும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருமத்தம்பட்டி பேரூராட்சி நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க துணைத் தலைவர் வாகை சிவக்குமார் கூறியதாவது: பல கடைகளில் தடை செய்யப்பட்ட குளிர்பானங்களைக்கூட விற்கின்றனர். குளிர்பானங்களில் உற்பத்தி தேதி, அதில் கலக்கப்பட்டுள்ள பொருட்கள் உள்ளிட்ட எந்த விவரமும் இருப்பதில்லை. அதிக நேரம் வெயிலில் இருக்கும் குளிர்பானங்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாக மாறிவிடுகின்றன.

குளிர்பானம் மற்றும் உணவுப் பொருட்களுக்கு பில்லும் கொடுப்பதில்லை. இதை தட்டிக் கேட்பவர்களையும் மிரட்டும் வகையில் பேசி, அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுகின்றனர் என்றார்.

கோவை எய்ம் தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாக அறங்காவலர் பி.ஏ.திருநாவுக்கரசு கூறியதாவது: பயண அவசரத்தில் தண்ணீர் கிடைத்தால் போதும் என்று கருதி, விலை, தரத்தைப் பற்றி யோசிக்காமல் குடிநீர் பாட்டில்களை வாங்குகின்றனர். இதை தவிர்க்க வேண்டும். தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஆறிய பின்னர் பாட்டிலில் ஊற்றி எடுத்துச் செல்ல வேண்டும். தவிர்க்க முடியாத தருணங்களில், முறையான அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதா, காலாவதியாகாமல் உள்ளதா, மூடி, முத்திரையிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். குடிநீர் தெளிவாக, நிறம், மனம் ஏதும் இல்லாமல் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

 தொடர் சோதனை

கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது: பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கடைகளில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு, காலாவதியான குளிர்பானங்களைப் பறிமுதல் செய்வதுடன், உடனுக்குடன் அவற்றை அழித்துவிடுகிறோம். காலாவதியான மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். பொதுமக்களும் குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்களை வாங்கும்போது, அரசு வழங்கிய உரிமம் எண் உள்ளதா, தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் விவரம், காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை கவனித்து, பின்னரே அவற்றை வாங்க வேண்டும் என்றார்.

- ஆர்.கிருஷ்ணகுமார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close