[X] Close

ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர ராஜஸ்தானிலிருந்து கூடுதல் வேகன் வருகை


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 07:45 am
  • அ+ அ-

சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய ராஜஸ்தானில் இருந்து 50 வேகன்கள் கொண்ட மற்றொரு ரயில் வருகிறது. இந்த வேகனும் வந்த பிறகு சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்ய முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் நிலவும் தண்ணீர்தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக் கத்துக்கு ரயில் மூலம் குடிநீரைக் கொண்டுவர ரூ.65 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து, ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் பணிகள்கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளன.

குழாய்கள் பதிக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரயில் வேகன்களில் தண்ணீர் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் ஒருமுறை குடிநீர் கொண்டு வருவதற்கு தமிழக அரசு சார்பில் ரயில்வே துறைக்கு ரூ.8.60 லட்சம் கட்டணம் வழங்கப்படவுள்ளது.

ஜோலார்பேட்டையில் இருந்து வேகன்களில் கொண்டு வரப்படும் தண்ணீர் இன்று மதியம் வில்லிவாக்கம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் வேகன்களில் இருந்து பைப் லைன்களுக்கு நீரைக் கொண்டு செல்லும் சுமார் 40 பிளாஸ்டிக் பைப்களை பொருத்தும் பணிகளும் நேற்று நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. தண்ணீர் கொண்டுவரப்படும் ரயிலில் மொத்தம் 50 வேகன்கள் இருக்கும்.

ஒவ்வொரு வேகன்களிலும் தலா 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர்நிரப்பப்படுகிறது. அதன்படி, ஒருரயில் மூலம் மொத்தம் 25 லட்சம்லிட்டர் தண்ணீர் கொண்டுவரப் படும். ரயிலில் தண்ணீரை நிரப்பவும், தண்ணீரை வெளியேற்றவும் தலா 4 மணிநேரம், பயணம் நேரம் 6 மணிநேரம் என ஒரு முறை ரயிலில் தண்ணீர் கொண்டுவர மொத்தம் 14 மணிநேரம் ஆகிறது.

எங்கள் கணக்குப்படி, 2 நாட்களுக்கு 3 முறை மட்டுமே தண்ணீர் கொண்டுவர முடியும். இதற்கிடையே, மற்றொரு ரயில் வேகனைக் கேட்டுள்ளோம். இதற்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 50 வேகன்களை கொண்ட மற்றொரு ரயில் ராஜஸ் தான் மாநிலம் கோட்டாவில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது. அடுத்த 2 நாட்களில் இந்த வேகன்கள் சென்னைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் சென்னைக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும்’’என்றனர்.

இந்நிலையில் சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்றுஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close