[X] Close

6 மாத காலம் திட்டம்போட்டு கொள்ளையடித்தவர்கள் 3 மாதத்தில் சிக்கினர்: கொண்டையை மறைக்க மறந்த கதை


6-3

  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 21:46 pm
  • அ+ அ-

கொள்ளையடிக்க ஆறுமாத காலம் திட்டம்போட்டு படிப்படியாக திட்டத்தை தீர்மானித்து பெரும் தொகையை கொள்ளையடித்து போலீஸ் கண்ணில் மண்ணை தூவியவர்கள், கொண்டையை மறைக்க மறந்த கதையாக சிக்கியது போலீஸாரால்சுவாரஸ்யமாக பேசப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 3-ம் தேதி, மக்களவை தேர்தல் பிரச்சாரம் நாடெங்கும் பரபரப்பாக உள்ள நிலையில் ஒட்டுமொத்த போலீஸாரும் பாதுகாப்புப்பணியில் இருந்த நேரத்தில் ஈரோடு பெருந்துறை அருகே சாமர்த்தியமாக போலீஸார் வேடத்தில் ரூ.3.5 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

போலீஸாருக்கு தலைவலியாக அமைந்த சாமர்த்திய கொள்ளை குறித்தும் துப்புதுலங்கி கொள்ளையர்கள் சிக்கியது குறித்த சுவாரஸ்ய கதை தற்போது வெளியாகி உள்ளது.

காட்சி-1

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்வர் சதாத்(52). இவருக்கு தொழில் நகைக்கடை மற்றும் நகைத் தயாரிப்புத் தொழிலும் ஆகும். மலப்புரத்திலும், கோவையிலும் சிட்டி கோல்டு என்ற பெயரில் நகைக் கடைகளை நடத்தி வருகிறார். கேரள பாரம்பரிய நகைகளை தயாரித்து சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள நகைக்கடைகளுக்கு விற்பனை செய்வதையும் ஒரு தொழிலாக நடத்தி வருகிறார்.

இவர் சென்னையில் விற்பனை செய்யும் கடைகளுக்கு நகைகளை கொண்டுச் சென்று சப்ளை செய்வது, பின்னர் பணத்தை வாங்கிவருவது ஊழியர்களின் வேலை. இதற்காக நம்பிக்கையான ஆட்கள் இவரிடம் இருந்தனர்.

காட்சி-2

கத்தாரில் லாரி ஓட்டுனராக பணியாற்றியவர் ஜோபி தாமஸ் (45). ஒழுங்கீனம் காரணமாக எக்சிட் கொடுத்து அனுப்பப்பட்டார். கையில் இருந்த பணத்தை வைத்து சொந்த ஊரில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். ஆடம்பர வாழ்க்கை, ஊதாரித்தனமான செலவு காரணமாக அனைத்து பணமும் கரைய பணம் சம்பாதிக்க குறுக்கு வழியை தேடினார்.

போதைப்பழக்கத்தில் கிடைத்த கூட்டாளி சூலூரைச் சேர்ந்த அப்துல் ஜலீல் என்பவருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டார். இதில் கோவை போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அவருக்கு சில நட்புகள் கிடைத்தன. கேரளாவைச் சேர்ந்த சில கைதிகள் நெருக்கமாகினர். முரளிதரன், மலப்புரத்தைச் சேர்ந்த அலியார், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நவுசாத் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. ஏண்டா சில்லறைத்தனமாக வழிப்பறி செய்து பிழைக்கிறாய் அதில் என்ன பணம் கிடைக்கும், பெரிசா அடிக்கணும் செட்டில் ஆயிடனும் என பேசி முடிவெடுத்துள்ளனர்.

பின்னர் ஒவ்வொருவராக வெளியே வர அனைவரும் ஒன்றுச் சேர்ந்து பெரிய கொள்ளையாக அடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக கேரளா மற்றும் தமிழகத்தில் கோடிகள் புரளும் தொழிலில் ஈடுபடுவோரை அவர்கள்  கண்காணிக்க திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளனர்.

தமிழக - கேரளா எல்லையில் உள்ள வாளையாரில் ஆறுமாதமாக போகிற வருகிற கார்களை கண்காணித்து குறிப்பெடுத்து கவனித்து வந்துள்ளனர். அதில் ஒரு கார் அவர்கள் கவனத்தை பெரிதும் கவர்ந்துள்ளது. அந்தக் காரின் எண்ணை குறித்துக்கொண்டு அதன் உரிமையாளர் யார் என விசாரித்தபோது நகைக்கடை முதலாளி அன்வர் சதாத் என தெரியவந்தது.

காட்சி – 3

கடந்த  ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி  வழக்கம்போல் சென்னையில் விற்பனை செய்த நகைகளுக்கான பணத்தை வாங்கிக்கொண்டு சென்னையிலிருந்து குறிப்பிட்ட அந்தக்காரில் கேரளா திரும்புகின்றனர் அன்வர் சதாத் நகைக்கடையின் ஊழியர்கள். ஊழியர்களிடம் பல நகைக்கடையில் வசூலித்த ரொக்கப்பணம் ரூ.3.5 கோடி இருந்தது.

பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே நகைக்கடை ஊழியர்களின் கார் கடந்தபோது சைரனுடன் போலீஸ் கார் ஒன்று இடைமறித்தது. போலீஸ் நம்மை ஏன் மடக்கவேண்டும் என ஊழியர்கள் திகைத்து காரை நிறுத்த காரை சோதனைப்போடவேண்டும், தேர்தல் நேரம் பணம் இருக்கிறதா என சோதனைப்போடவேண்டும் என கூறுகின்றனர்.

காரில் ரூ.3.5 கோடி பணம் உள்ளது. அவ்வளவும் நகையை விற்று வந்த பணம் முறையான கணக்கு உள்ளது என அவர்கள் ஆவணங்களைக் காட்ட உனது ஆவாணங்கள் யாருக்குத்தேவை என கூறிய கும்பல் அவர்களை கட்டிப்போட்டுவிட்டு பணத்துடன் காரையும் எடுத்துக்கொண்டு மாயமானது.

பின்னர்தான் தெரிந்தது வந்தது போலீஸ் அல்ல கொள்ளையர்கள் என்று. பின்னர் போலீஸில் புகார் அளிக்க கடத்திச் செல்லப்பட்ட கார்மட்டும் கோவை அருகில் வாளையாரில் அனாதையாக மீட்கப்பட்டது. பணத்தை கொள்ளையடித்ததும், காரை கடத்தியதும் ஜோபி தாமஸ் தலைமையிலான கும்பல். பணத்துடன் கேரளாவுக்குள் ஐக்கியமாகிவிட்டனர்.

காட்சி- 4

போலீஸாருக்கு சவாலாக இருந்தது இந்த கொள்ளை. பணத்துடன் மாயமானவர்கள் திட்டம்போட்டு திருடியதால் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. விளைவு போலீஸார் சைபர் கிரைம் உதவியை நாடினர். கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் பேசப்பட்ட அனைத்து கால்களும் டிரேஸ் செய்யப்பட்டது.

அதேப்போன்று கார் மீட்கப்பட்ட கோவைப்பகுதியிலும் செல்போன் எண்கள் ட்ரேஸ் செய்யப்பட்டது. அதில் சில எண்கள் பொருந்திவந்தது. ஆனால் போலீஸாரின் துரதிர்ஸ்டம் அது அணைத்து வைக்கப்பட்டதால் அடுத்தக்கட்டத்துக்கு நகரமுடிவில்லை. செல்போன் எண்கள் விலாசம் போலியாக இருந்தது.

கொண்டையை மறைக்க தெரியாத கொள்ளையர்கள்…

இப்படியே 3 மாதங்கள் ஓடிய நிலையில் அந்த செல்போன் எண்கள் மீண்டும் செயல்பட தொடங்கின. பொறுமையோடு காத்திருந்த போலீஸாருக்கு பெரிய வரப்பிரசாதமாக செல்போன் எண்கள் செயல்பட்டது வழக்கை துரிதப்படுத்த எளிதாக இருந்தது.

தண்ணீரில் மூழ்குபவனுக்கு சிறுகிளை கிடைத்ததுபோல் உடனடியாக அதை கைப்பற்றிக்கொண்ட போலீஸார்  செல்போன் எண்களின் சிக்னல் எங்கெங்கு தென்படுகிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அது தொடர்புடைய எண்களையும் தொடர ஆரம்பித்தனர்.

திடீரென அந்த எண்கள் விஜயமங்கலம் பகுதியில் பயன்பாட்டில் உள்ளதை கண்டறிந்த போலீசார் வாகன சோதனையை பலப்படுத்தினர். அப்போது ஒரு கார் வர அந்தக்காரில் உள்ளவர்கள் எண் சரியாக அந்த எண்ணுடன் பொருந்த அப்புறம் என்ன அப்படியே மடக்கிப்பிடித்தனர்.

காரில் வந்து சிக்கியது ஜோபி தாமஸ், முரளிதரன், அலியார் என்பதை சொல்லவும் வேண்டுமா? போலீஸ் வேடத்தில் வந்து கொள்ளையடித்தவர்கள் தாங்கள்தான் என்பதை போலீஸ் விசாரணையில் மூவரும் ஒப்புக்கொண்டனர்.  மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 31 லட்ச ரூபாயை மட்டுமே பறிமுதல் செய்ய முடிந்தது.

மூன்று பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். அந்த கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை தேடி வருகின்றனர். சினிமா வில்லன்கள்போல் கொள்ளையடிக்க 6 மாதம் திட்டம்போட்டவர்கள் அதன்பின்னர் பணத்தை ஊதாரியாக செலவழித்து 3 மாதம் தடயம் இல்லாமல் செய்தவர்கள் கொண்டையை மறைக்கத்தெரியாமல் மீண்டும் அதே சிம்கார்டில் செல்போனை இயக்கியது அவர்கள் சிக்க காரணமாக அமைந்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close