[X] Close

கரூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் முகிலன்


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:16 am
  • அ+ அ-

-,

கரூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு நேற்று அதிகாலை ஆஜர்படுத்தப்பட்ட முகிலன், 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரான முகிலன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொடர்பான சில வீடியோ ஆதாரங்களை சென்னையில் பிப்.14-ல் வெளியிட்டார். அதற்கு அடுத்த நாள் அவர் மாயமானார். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், முகிலனுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவரான நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையத்தைச் சேர்ந்த பெண், கடந்த மார்ச் 30-ம் தேதி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், முகிலனுடன் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றபோது, அவருடன் ஒன்றாக தங்கியிருந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்திருந்தார்.

அவரது புகாரின்பேரில், முகிலன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். முகிலன் காணாமல்போன வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த முகிலன் மீதான பாலியல் வழக்கு கடந்த மே 17-ம் தேதி கரூர் மாவட்ட சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி திருப்பதியில் பிடிபட்ட முகிலனை சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார், பாலியல் வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக அவரை கரூருக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு அழைத்துவந்தனர். கரூர் 2-ம் எண் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் விஜயகார்த்திக் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தனது போராட்டத்தின் நோக்கம் மற்றும் உடல் நலம் குறித்து மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும், மீண்டும் வரும் 24-ம் தேதி ஆஜர்படுத்துமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தூங்கவிடாமல் சித்தரவதை

பின்னர் காவல்துறை வாகனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, செய்தியாளர்களிடம் முகிலன் கூறியபோது, “என்னை சிலர் கடத்திச் சென்று சித்தரவதை செய்தனர். தற்போது போலீஸார் என்னை கைது செய்து இரவும், பகலும் தூங்கவிடாமல் சித்தரவதை செய்கின்றனர். எந்த உண்மையும் வெளிவந்துவிடக் கூடாது என போலீஸார் செயல்படுகின்றனர்” என்றார்.

தூண்டுதலால் பாலியல் புகார்

முகிலனின் மனைவி பூங்கொடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசும், ஸ்டெர்லைட் ஆலையும் திட்டமிட்டு என் கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டு என்ற பழியைப் போடுகிறது. பலவகை தூண்டுதலின்பேரில் அவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுஉள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை குறித்து சிடி வெளியிட்டபோது, மேலும் ஒரு சிடியை வெளியிட இருப்பதாக என் கணவர் தெரிவித்திருந்தார். அந்த சிடியை கைப்பற்றுவதற்காகவே அவரைக் கடத்தியுள்ளனர். அந்த சிடி வெளியில் வந்தால் அரசுக்கு பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தால், அந்த ஆதாரத்தை பெறவே என் கணவரை கடத்தியுள்ளனர். நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட என் கணவருக்கு முதலுதவி சிகிச்சை கூட தரவில்லை என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close