[X] Close

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உண்ணாவிரதப் போராட்டம்


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:04 am
  • அ+ அ-

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டாக்டர்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது. மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்த டாக்டர்களுக்கு கலந்தாய்வு மூலம் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும்.

மருத்துவப் பட்டமேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே அரசு டாக்டர்களுக்கு இருந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை திரும்ப கொண்டுவர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை வரும் 16-ம் தேதி வரவுள்ள நிலையில், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அரசு டாக்டர்கள் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பைத் தொடங்கி தொடர் போராட்டங்களை அறிவித்தனர்.

அதன்படி, முதல்கட்டமாக சென்னை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு டாக்டர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், 200-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 12-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 15-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளனர். 16-ம் தேதி சுகாதாரத் துறையின் மானியக் கோரிக்கையின்போது கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்றால், 18-ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதென அரசு டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close