[X] Close

கல்வித்துறையில் பணி நியமனம்: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் உட்பட 9 பேர்மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு


3-9

  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 19:43 pm
  • அ+ அ-

பள்ளி கல்வித் துறையில் பணி நியமன முறைகேடு சம்பந்தமாக 3 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட கல்வித்துறை உயர் அதிகாரிகள் 9 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வாட்ச்மேன் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் 5000 தேர்வு செய்ய அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. உசிலம்பட்டி பகுதியில் 13 வாட்ச்மேன், 25 துப்புரவு தொழிலாளர்கள் தேர்வு செய்ய ஒதுக்கப்பட்டது.

13 வாட்ச்மேன் பதவிகளுக்கு எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் 47 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 30 பேர் தேர்வானார்கள். இறுதியாக 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 25 துப்புரவு தொழிலாளர்களுக்கு 116 பேர் தேர்வு செய்யப்பட்டு, 65 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கும், இறுதியாக 20 பேரும் தேர்வானார்கள்.

இதில் விண்ணப்பித்தவர்களில் வாய்ப்பேசாத மாற்றுத்திறனாளி கணேசனும் ஒருவர். நேர்முகத் தேர்வுக்கு வரும்படி அவருக்கு அழைப்பும் வந்தது. ஆனால் அவர் அங்கு சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தேர்வாகவில்லை.

இதையடுத்து அவர் பணி நியமனம் குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில், அப்போதைய மதுரை வடக்கு எம்எல்ஏ ஏ.கே.போஸ், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ முத்துராமலிங்கம், உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ கதிரவன் ஆகிய 3 பேர் மற்றும் பிற அரசு உயரதிகாரிகளின் பரிந்துரைகளின் பேரில் 9 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில்தான் சமீபத்தில், சர்ச்சைக்குரிய பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியாளர்களை நியமிக்கும்படி பரிந்துரை அளித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஏ.கே.போஸ். முத்துராமலிங்கம், கதிரவன் ஆகியோர் மீதும், அப்போது பணியில் இருந்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட  6 அரசு அதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏகே போஸ் உள்ளிட்ட 3 பேர் தற்போது உயிருடன் இல்லை. அதேநேரம் முதல் தகவல் அறிக்கையில் இந்த நியமனங்களுக்கு பணமோ அல்லது பணம் தொடர்பான அனுகூலங்களோ கொடுக்கப்பட்டதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

2012-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், ஏழு ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close