[X] Close

மதுரை மாநகராட்சி ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடுக: ஆணையருக்கு உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 17:26 pm
  • அ+ அ-

-கி.மகாராஜன்

மதுரை மாநகராட்சி ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய ஆணையர் 12 வாரங்களுக்குள் உத்தரவிட வேண்டும். மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.முருகன், பணி மாற்றத்துக்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணி, "நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரித்துவிட்டது. இதை தடுக்க வேண்டும். லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க முடியாது. ஆனால் குறைக்க முடியும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத் துறை அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்ட போதிலும் லஞ்சம் குறையவில்லை.

லஞ்சம், ஊழலில் தொடர்புடையவர்களை இரும்பு இதயம், இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். ஆனால் லஞ்சம் புழங்கும் இடங்களை கண்டறியவும், லஞ்சம் வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் தயாராக இல்லை.

மதுரை மாநகராட்சியில் லஞ்சம் அதிகளவில் உள்ளது. மாநகராட்சி சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. மாநகராட்சி ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்க எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள மாநகராட்சி சொத்துக்களை மீட்க வேண்டும்.

இதற்கு மதுரை மாநகராட்சி விஜிலென்ஸ் பிரிவை பலப்படுத்த வேண்டும். மதுரை மாநகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி கட்டிடங்களில் 4 வாரத்தில் விஜிலென்ஸ் பூத்கள் திறந்து, சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் மாநகராட்சி ஊழல் தொடர்பாக இந்த பூத்களில் புகார் அளிக்கலாம்.

விஜிலென்ஸ் பூத்கள் மாநகராட்சி ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். மாநகராட்சி அலுவலகங்கள், கட்டிடங்களில் லஞ்சம் வாங்குவது, கொடுப்பது சட்டவிரோதம் என போர்டு வைக்க வேண்டும். விஜிலென்ஸ் பிரிவில் சோதனைக்காக ரகசிய குழுவை அமைக்க வேண்டும்.

மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் பெயரில், குடும்பத்தினர் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்து விபரங்களை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையர் 12 வாரத்தில் உத்தரவிட வேண்டும். விபரம் பெறப்பட்டதும் அதை ஆய்வு செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திட்டப்பணிகளில் முறைகேடுகளை ஆய்வு செய்ய விஜிலென்ஸ் பிரிவில் சிறப்பு குழு அமைக்க வேண்டும். இந்தக்குழு திட்டப்பணிகளை ஆய்வு செய்து முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இளநிலை பொறியாாளர், உதவி பொறியாளர், செயற் பொறியாளர், மண்டல அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறையை 12 வாரத்தில் முடிக்க வேண்டும்.

மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்புகளை அடையாளம் காணவும், அவற்றை மீட்கவும், அந்த இடங்களில் இருப்பவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க 4 வாரத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close