[X] Close

நீட் தேர்வில் முழுவிலக்கு வாங்கித் தருவதற்கான அக்கறை தமிழக அரசுக்கு இல்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 14:59 pm
  • அ+ அ-

நீட் தேர்வில் முழுவிலக்கு வாங்கித் தருவதற்கான அக்கறை தமிழக அரசுக்கு இல்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (புதன்கிழமை) சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து நீட் தேர்வு விலக்கு மசோதாக்கள் குறித்து பேசியதாவது:

"நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விதி விலக்கு வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் 2 மசோதாக்கள் ஏகமனதாக 01-02-2017 அன்று நிறைவேற்றப்பட்டது.. அப்படி நிறைவேற்றப்பட்ட அந்த 2 தீர்மானங்களையும், குடியரசு தலைவர் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தோம்.

ஆனால், இதுநாள் வரையில் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சினையை நான் எழுப்பிய நேரத்தில் சட்டத்துறை அமைச்சர் ஒரு தவறான தகவலை, "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல" மூடி மறைத்திருக்கக்கூடிய கொடுமை நடந்திருக்கின்றது.

அதாவது, 2 மசோதாக்களைப் பற்றிக் கேட்ட போது சட்டத்துறை அமைச்சர், ஒப்புதல் வழங்குவதை நிறுத்தி வைத்த குடியரசுத் தலைவர் இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பியிருப்பதாக 22-09-2017 மத்திய அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனவே, நேற்று முன்தினம் சட்டத்துறை அமைச்சர் முதலில் நிறுத்திவைக்கப்பட்டது என்று தான் கூறினார். இப்பொழுது, நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றாரே தவிர அது திருப்பி அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது என்று சட்டப்பேரவையில் சொல்லவில்லை.

அதனால்தான், மத்திய அரசின் மூலமாக தமிழக அரசுக்கு வந்திருக்கக்கூடிய கடிதத்தை நான் ஆதாரத்தோடு இன்றைக்கு சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சினையை எழுப்பினேன்.

அதில் மசோதாக்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனவே, 21 மாதங்கள் ஆகிவிட்டன. தமிழக அரசு, 21 மாதங்களாக என்ன செய்துகொண்டிருக்கின்றது? என்பதை சட்டப்பேரவையில் வைத்திருக்க வேண்டும், இதனை வைத்தால் தான் 6 மாதத்திற்குள் மீண்டும் வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடியும் என்பதை 201 விதி தெளிவாகச் சொல்கின்றது.

எனவே, அதையும் கோட்டைவிட்டு விட்டார்கள். இப்பொழுதும், இதுகுறித்து நான் கேட்டேன். அதற்கு தெளிவான பதிலை, முறையான விளக்கத்தை சட்டத்துறை அமைச்சரும் சொல்லவில்லை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் பூசி முழுகுகின்றார். ஏற்கெனவே, சட்டப்பேரவையில் நாங்கள் விவாதித்திருக்கக்கூடிய பிரச்சினைகளை எடுத்துப் பேசினார்களே தவிர, 2 மசோதாக்களும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதைப் பற்றி வாய் திறக்கவில்லை. எனவே, இதனை கண்டிக்கக்கூடிய வகையில் திமுக சார்பில் வெளிநடப்பு செய்திருக்கின்றோம்", என ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.

திரும்பப் பெறுவதற்கான காரணங்கள் கேட்டிருக்கின்றோம். அதற்கான விளக்கம் இதுவரை தரவில்லை என்று, அமைச்சர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கின்றார், அதுபற்றி உங்கள் கருத்து?

எப்பொழுது சொன்னார். நேற்று முன்தினம் தான் இந்த பிரச்சினை ஆரம்பிக்கின்றார்கள். தற்பொழுது 6 மாதம் ஆகிவிட்டது, இந்தக் கடிதம் வந்ததற்குப் பிறகு உடனே சொல்லியிருக்க வேண்டும். எத்தனையோ முறை  சட்டப்பேரவை கூடியிருக்கின்றது. அதன் பிறகு, அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் அழுத்தம் கொடுப்போம் என்று சொல்லியிருக்கின்றார்கள். சட்டப்பேரவையில் பலமுறை அழுத்தம் கொடுப்போம் என்று தான் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இந்தக் கடிதம் வந்த விவரத்தை ஏன் மூடிமறைக்க வேண்டும். அதனை, செய்யவேண்டிய அவசியம் என்ன? எனவே, இந்த நீட் தேர்வைப் பொறுத்தவரையில் அதில் முழுவிலக்கு வாங்கித் தருவதற்கான அக்கறையில்லை. ஏற்கெனவே, முதல்வர் சென்று பிரதமரை சந்தித்து, சொன்னதாக சொன்னார்கள். அதுவும் பொய் என்பதுதான் என்னுடைய வாதம்.

மீண்டும் தீர்மானம் கொண்டுவருவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?

விதிமுறைப்படி தீர்மானம், எடுத்துவருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து, அதனால் தான் இந்தப் பிரச்சினையை  சட்டப்பேரவையில் எழுப்பியிருக்கின்றேன்.

என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close