[X] Close

அரசு அலட்சியத்தை கட்டியங்கூறும் 'ஒருத்தரும் வரேல' ஆவணப்படம்! வழக்கறிஞர் திவ்யபாரதியின் நேர்காணல்


trailer-of-orutharum-varela-nobody-came-was-released

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Jun, 2018 12:31 pm
  • அ+ அ-

நீண்ட சட்ட போராட்டத்துக்குப் பின்னர் சமூக செயற்பாட்டாளும் ஆவணப்பட இயக்குநருமான திவ்யபாரதி வழக்கறிஞராகியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு அவரது 2-வது ஆவணப்படமான 'ஒருத்தரும் வரேல' குறித்து பேசினோம். அவரது முதல் ஆவணப்படம் கக்கூஸ். அப்படம் சர்வதேச கவனத்தைப் பெற்றது.

மலம் அள்ளும் தொழிலைச் செய்பவர்களின் வேதனைகளை மட்டுமல்ல அரசின் அலட்சியத்தையும் ஆவணப்படுத்தியது அந்தப் படம். அதற்காகவே இந்திய இறையான்மைக்கு எதிரான படம் என்று வழக்கையும் சந்தித்தது.

இப்படி எத்தனையோ தடைகள் வந்தாலும்கூட இதுபோன்ற வழக்குகள் திவ்யாவின் பயணத்தை எந்த வகையிலும் தடுக்கவில்லை.

அடுத்த ஆவணப்படம் பற்றி கூறும்போது"மனிதாபிமானமுள்ள நான் என் மக்கள் படும் வேதனையை எப்படிக் கடந்துபோக முடியும். அதனால்தான் ஒருத்தரும் வரேல ஆவணப்படுத்தை எடுத்துள்ளேன்" என்றார்.

வழக்கறிஞராகிவிட்டீர்கள். வாழ்த்துகள். எப்படி உணர்கிறீர்கள்?
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 2014-ம் ஆண்டு முதல் இதற்காகப் போராடி வருகிறேன். இந்த 4 ஆண்டுகளும் என் மீதான வழக்குகளில் இருந்து விடுபட்டு வழக்கறிஞராகிவிட வேண்டும் என அரும்பாடுபட்டேன். நீண்ட போராட்டத்துக்கு வெற்றி கிட்டியுள்ளது. இதை, நான் எதிர்பார்க்கவில்லை.

உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருமுறை ஒரு பதிவைப் பார்த்து நெகிழ்ந்துபோனேன். உங்கள் அப்பாவின் ஏக்கம் குறித்து சொல்லியிருந்தீர்கள். இப்போது அப்பாவின் மனநிலை எப்படி இருக்கிறது?

ஒருமுறை அல்ல பலநூறு முறை அப்பாவைப் பற்றி முகநூலில் எழுதியிருக்கிறேன். என் அப்பா கர்ணன் எளிய மனிதர். என்னை எப்படியாவது வழக்கறிஞராகப் பார்த்துவிட வேண்டும் என ஏங்கினார். "உன்னை அந்த வழக்கறிஞர் கவுனில் பார்த்தால் மட்டும்போதும் நீ சம்பாதிப்பதைப் பார்க்கக் கூட தேவையில்லை" என நிறைய முறை என்னிடம் ஏக்கத்துடன் கூறியிருக்கிறார். இன்று அவரது கனவு நனவாகிவிட்டது. யதார்த்த மனிதர். அவருக்கு மகிழ்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்தத் தெரியாது. ஆனால், அவர் மகிழ்ச்சியை நான் உணர்கிறேன்.

கக்கூஸ் ஆவணப்படத்துக்குப் பின் ஒருத்தரம் வரேல ஆவணப்படம் எடுக்க எது உந்து சக்தியாக இருந்தது?

நான் வழக்கறிஞர், இயக்குநர் என்ற அடையாளத்தை எல்லாம் தாண்டி மனிதாபமுள்ள மனிதி. மனிதாபிமானமுள்ள நான் என் மக்கள் படும் வேதனையை எப்படிக் கடந்துபோக முடியும். அதனால்தான் ஒருத்தரும் வரேல ஆவணப்படுத்தை எடுத்துள்ளேன்.

ஒருத்தரும் வரேல ஆவணப்படம் எப்போது வெளியாகும்? ரன்னிங் டைம் எவ்வளவு?

ஜூலை 15 முதல் 20 தேதிக்குள் ஆவணப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இன்னும் கொஞ்சம் கிராஃபிக்ஸ் வேலை பாக்கி இருக்கிறது. அதைவிட மிக முக்கியமாக நிதி நெருக்கடி இருக்கிறது. நிதித் தேவை பூர்த்தியானவுடன் படம் தயாராகிவிடும். 100 நிமிடங்கள் என ரன்னிங் டைம் திட்டமிட்டிருக்கிறோம்.

ஒருத்தரும் வரேல சூட்டிங் பற்றி சொல்லுங்கள்..

2017 டிசம்பர் 7-ம் தேதியெல்லாம் கன்னியாகுமரி சென்றுவிட்டேன். அதிகம் பாதிக்கப்பட்ட தூத்தூரில் எனக்கு சில நண்பர்கள் இருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகவே அங்கு சென்றேன். எப்போதும் போல எனது கேமராவையும் எடுத்துச் சென்றிருந்தேன். 

முதலில் சில நாட்கள் நான் எதுவுமே பதிவு செய்யவில்லை. அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மட்டுமே அங்கிருந்தேன். அப்போதுதான் ஒவ்வொரு ஊடகமாக தூத்தூரில் முகாமிடத் தொடங்கின. ஊடகங்கள் கூட்டிவைத்திருந்த அந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். ஒரு ஓரமாக அமர்ந்து நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தேன்.
லைவ் ஷோ என்றாலும்கூட மக்கள் அரசியல் பேசும்போது மைக் லாவகமாக விலக்கப்படும். கேமரா கச்சிதமாகப் பேனாகிவிடும். இன்னொரு பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் காரில் இருந்து இறங்கும்போதே நல்லா பெர்ஃபார்ம் செய்யும் பெண்கள் இருக்கும் வீடுகளுக்குச் செல்லவும் என்றார். அதாவது கதறி அழுபவர்களை படம்பிடித்து பேட்டியெடுக்க அவர் ஆர்வம் காட்டினார்.

இவற்றையெல்லாம் பார்த்தபோது எனக்கு கோபம் வந்தது. மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்கள் எதைக் கூறத் தவறியதோ எதைப் பற்றி பேசத் தயங்கியதோ அதை ஆவணப்படுத்த வேண்டும் என விரும்பினேன். அதன் விளைவுதான் ஒருத்தரும் வரேல ஆவணப்படம்.

டிசம்பர் 12-ம் தேதிதான் எனது கேமராவை நான் கையிலெடுத்தேன். கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, கேரளா என பல பகுதிகளுக்குச் சென்று ஆவணப்படுத்தினேன். சூட்டிங் முடித்து 80 நாட்களாக இந்த ஆவணப்படத்துக்காக வேலை பார்த்திருக்கிறோம்.

இந்த ஆவணப்படத்தின் இலக்கு என்ன?

அரசியல் பேச வேண்டும் என்பதுதான் இலக்கு. ஒக்கி புயலில் இத்தனை மீனவர்களின் உயிர் பலியாக அரசாங்கதான் காரணம் என்பதை நிறுவ விரும்புகிறேன். கடலையும் கடற்கரையையும் கார்ப்பரேட்டுகள் தங்கள் வசமாக நினைப்பதையும் அதற்கு அரசாங்கம் துணை போவதையும் சாட்சிப்படுத்த விரும்புகிறேன். மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தைக் கட்டியங் கூறும் ஆவணப்படம் இது.

இந்த ஆவணப்படத்தை எடுக்கும்போது நீங்கள் மிகுந்த வேதனைக்குள்ளான தருணம்?

ஆவணப்படம் முழுவதையுமே நான் அழுதுகொண்டுதான் எடுத்தேன். ஒரு தனி நபரின் கதறலையே கேட்க முடியாது. 40 குடும்பங்களின் கதறலை நீங்கள் ஒருசேர கேட்கும்போது உள்ளம் உடைந்துவிடும். ஒரு தேவாலயத்தில் திருப்பலியின்போது ஒரு காட்சியை எடுத்தோம். தேவாலயத்திலிருந்த அனைவருமே கதறி அழுதனர். அதை ஆவணப்படுத்தும்போதும் என் கைகள் நடுங்கின. அவர்களுக்காக எந்த அரசும் அரசு இயந்திரமும் வரவில்லை. ஒருத்தருமே வரலே.

இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.

இந்த ஆவணப்படத்தை இடப்பக்கம் மீடியா தயாரித்துள்ளது. நடராஜன சங்கரன் இசையமைத்துள்ளார். தனிக்கொடி, ரேஷ்மி சதீஷ் பாடல்களைப் பாடியுள்ளனர். பகலவன் ஆவணப்படத்தை எடிட் செய்திருக்கிறார்.

- பாரதி ஆனந்த்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close