[X] Close
 

மதுரை மாநகராட்சி பள்ளிக்குள் அத்துமீறி போஸ்டர்கள் ஒட்டிய நடிகர் விஜய் ரசிகர்கள்


madurai-vijay-fans-poster

இளங்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து போஸ்டர் ஒட்டியுள்ள விஜய் ரசிகர்கள் | படம்: எஸ். ஜேம்ஸ்

  • kamadenu
  • Posted: 29 Jun, 2018 12:11 pm
  • அ+ அ-

மதுரை மாநகராட்சி பள்ளிக்குள் உள்ள சுவரில் ரசிகர்கள் அத்துமீறி நுழைந்து நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டியது ஆசிரியர்கள், பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து மதுரையில் நகர் முழுவதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டினர்.

தங்கள் அபிமான நடிகருக்கு போஸ்டர்கள் ஒட்டுவதில் தவறில்லைதான். ஆனால் அதை எந்த இடத்தில் ஒட்டுகிறோம் என்பதில் கவனமின்றி , மதுரை பனகல் சாலையில் உள்ள மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியின் தடுப்புச் சுவரை தாண்டி பள்ளி வளாகத்தில் பிரதான வகுப்பறை சுவரிலேயே அத்துமீறி விஜய்யின் பிறந்த நாள் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். 

பள்ளிகள் அருகே சினிமா போஸ்டர்கள் ஒட்டக் கூடாது என்று காவல்துறை பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், அதை ரசிகர்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இதனால் ஆசிரியர்கள், பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பள்ளியின் ஆசிரியர்கள் கூறியதாவது: ஆரம்பத்தில் எங்கள் பள்ளியின் வெளி காம்பவுண்ட் சுவரில்தான் சினிமா தியேட்டர் போஸ்டர்கள், நடிகர்களுடைய பிறந்தநாள் விழா போஸ்டர்களை ஒட்டுவர். போஸ்டர்கள் ஒட்ட வரும் ரசிகர்களை, நாங்கள் தடுக்க முடியாது. தட்டிக் கேட்கவும் முடியாது. அவர்கள் ஒட்டிச் சென்ற பிறகு மறுநாள் மாணவர்களை விட்டு போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்துவோம். தற்போது மாணவர்களை விட்டு போஸ்டர்களை அப்புறப்படுத்தக் கூடாது என கல்வித்துறை கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது.

பள்ளியில் உதவியாளர்கள் யாரும் இல்லை. ஏணியில் ஏறித்தான் அதை அகற்ற முடியும். ஆசிரியர்களால் மேலே ஏறி போஸ்டர்களை கிழிக்க முடியவில்லை என்பதால் அப்படியே விட்டு விட்டோம் என்றார்.

மாநகர் காவல் அதிகாரிகள் போஸ்டர்கள் ஒட்டும் விஷயத்தில் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது பள்ளி வளாகத்தினுள்ளேயே ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் போலீஸார் மவுனம் காத்து வருவது பொதுமக்கள், ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close