[X] Close
 

மேல்நிலை கல்வியில் கணினி கற்பிக்க போதிய ஆசிரியர் இன்றி கல்வி தரம் பாதிப்பு: ஆசிரியர் சங்கங்கள் புகார்


qualified-teachers-in-high-school

இளங்கோவன்

  • kamadenu
  • Posted: 29 Jun, 2018 12:08 pm
  • அ+ அ-

அரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், வகுப்பு நடத்த போதிய கணினி ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 2,570 மேல்நிலைப்பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என ஆசிரியர் சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வால் பள்ளிக் கல்வியில் சில மாற்றம் கொண்டு வரப்பட்டது. பிளஸ் 1 வகுப்பு இறுதித் தேர்வு, அரசு பொதுத்தேர்வாக நடத்தப்பட்டது. புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த நாட்களுக்குள் யூனிட் அடிப்படையில் (ஒரு யூனிட் 40 பக்கம்) கற்பிப்பதும் நடைமுறைப்படுத் தப்பட்டுள்ளது.

இதுவரை மேல்நிலைக் கல்வியில் அறிவியல் பிரிவில் மட்டும் கணினி வகுப்பு இருந்தது. இம்முறை அனைத்துப் பிரிவிலும் கணினி பாடம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கேற்ப கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் கல்வித் தரம் பாதிக்கும் என ஆசிரியர் சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன. 

இது குறித்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சிவகங்கை இளங்கோவன் கூறியதாவது: 

அரசு பள்ளிக் கல்வியில் சீர்திருத்தங்களை வரவேற்கிறோம். புதிய பாடத்திட்டத்தின்படி, பிளஸ் 1 வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் 1,000 முதல் 1,500 பக்கங்கள் இடம்பெறுகின்றன. மேலும், இவ்வாண்டு பிளஸ் 1 வகுப்பில் குரூப் 1 (பயோ சயின்ஸ்) பிரிவுகளில் சேர்க்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டைவிட கூடுதலாக 30 சதவீத மாணவர்கள் கலைப்பாட பிரிவுகளை தேர்ந்தெடுத்துள்ளனர். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 20 சதவீதம் பேர், 11-ம் வகுப்பில் சேர தயங்கி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இது போன்ற சூழலில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதை காரணம் காட்டி, உபரி என, ஆசிரியர்களை வெளி மாவட்டங்களுக்கு மாற்ற கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிடுகின்றனர்.

காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்கவில்லை. மாநிலம் முழுவதும் 2,570 மேல்நிலைப்பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மாற்று ஏற்பாட்டில் இருந்த கணினி ஆசிரியர்களை நிறுத்திவிட்டனர். மேல்நிலை கல்வி யில் அனைத்துப் பாடப்பிரிவிலும் கணினி வகுப்பு கட்டாயம் என, அறிவித்துவிட்டு, அதற்கான ஆசிரியர்கள் நியமனமின்றி எப்படி வகுப்பை நடத்த முடியும்? இதை அறிந்த பெற்றோர் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கின்றனர். புதிய பாடப் புத்தகங்கள் சப்ளை இன்றி, எப்படி பாடம் நடத்துவது? இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: பள்ளிகள் தொடங்கிய 2 வாரம் மட்டும் 11-ம் வகுப்பு புத்தகம் வர தாமதம் இருந்தது. ஆன்லைனில் அதற்கான பாடத்திட்டத்தை பார்த்து பாடமெடுக்க அறிவுறுத்தப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. கணினி பாடத்துக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

- என்.சன்னாசி




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close