[X] Close

மதுரைக்கு எய்ம்ஸ்: அதிமுக-பாஜக இடையே ‘போஸ்டர் யுத்தம்’ 


madurai-aiims-poster-war

  • kamadenu
  • Posted: 28 Jun, 2018 12:22 pm
  • அ+ அ-

மதுரையில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையவுள்ள நிலையில் அதிமுகவினரும், பாஜகவினரும் அந்த மருத்துவமனையைக் கொண்டுவர முயற்சித்தது யார்? என ‘போஸ்டர் யுத்தம்’ நடத்தி வருகின்றனர். 

விரைவில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழா நடக்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. 

இந்நிலையில், பாஜகவினர் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள அந்த விழாவில் பிரதமர் மோடியையும், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டாவையும், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணனையும் பங்கேற்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில், அதிமுகவை முன்னிலைப்படுத்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் ஆதரவாளர்கள் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை பிரதானப்படுத்தி அடிக்கல் நாட்டுவிழா நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். 


மதுரையில் எய்ம்ஸ்- ஐ கொண்டு வந்ததாக தமிழக அமைச்சர்களுக்கு பாராட்டு தெரிவித்து அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்

 இதற்கிடையில் அதிமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை கொண்டு வர முயற்சி செய்தது யார்? என பட்டிமன்றம் நடத்தாத குறையாக ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். 

அதிமுகவினர், தென் மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை மதுரையில் அமைக்க முயற்சி செய்த தமிழக முதல்வர் கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்பி. உதயகுமாருக்கு நன்றி தெரிவித்தும், பாஜகவினர் மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை போராடி பெற்று தந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.


மத்திய அமைச்சர்களுக்கு பாராட்டு தெரிவித்து பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான இடம் தேர்வு விஷயத்தை தவிர்த்து, மற்ற விஷயங்களில் தமிழக அரசும், மத்திய அரசும் இணக்கமாகச் செயல்படும் நிலையில் மதுரையில் இரண்டு கட்சியினரும் எதிரும், புதிருமாகவே செயல்படுகின்றனர். தற்போது அது, ‘எய்ம்ஸ்’ அறிவிப்பு விவகாரத்திலும் வெளிப்பட்டுள்ளது.

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close