[X] Close

திருப்பத்தூர் அருகே 13-ம் நூற்றாண்டு குறும்பர் நடுகல் கண்டுபிடிப்பு


artifact-found

திருப்பத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட நடுகல்

  • kamadenu
  • Posted: 28 Jun, 2018 12:17 pm
  • அ+ அ-

திருப்பத்தூர் அருகே 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குறும்பர் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் ஆ.பிரபு, முனைவர் சு.சிவசந்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர் முத்தமிழ், ஆய்வு மாணவர்கள் சரவணன், பரத் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள அத்திப்பள்ளம் என்ற கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, குறும்பர் கல், அதன் அருகே கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர் முனைவர் ஆ. பிரபு, ‘தி இந்து’விடம் கூறும்போது “ திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த அத்திப்பள்ளம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 

இப்பகுதி வாழ் மக்கள் நடுகல்லை ‘குறும்பர் கல்’ என்று அழைக்கின்றனர். நடுகல்லில் பொறிக்கப்பட்டுள்ள வீரனின் வலது கையில் நீண்ட வாள் உள்ளது. இடது கையில், போர்க்களத்தில் பயன்படுத்தும் தற்காப்புக் கேடயத்தை மிக நேர்த்தியாக பிடித்தபடி உள்ளது.

வீரனின் தலையில் கொண்டையும், நீண்ட காதுகளும் இக்கல்லில் காணமுடிகிறது. கால்களில் கழலும், கழுத்தில் ஆபரணங்களும் உள்ளன. இதில், கழுத்தில் அணியப்பட்டுள்ள ஆபரணம், இவ்வீரனை ஒரு சிற்றரசன் என்பதை காட்டுகிறது. வீரனுக்கு அருகில் பெண்ணின் உருவமும் இடம் பெற்றுள்ளது. 

அந்த பெண் வீரன் மடிந்தவுடன் அவனோடு தன்னையும் மாய்த்துக்கொண்ட அவரது மனைவியாக அந்த பெண் இருக்கலாம் என தோன்றுகிறது. நடுகல்லில் ஏர்க்கலப்பை போன்ற வடிவமும் பொறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, அந்தகால அரசனுக்குரிய நடுகல்களில் அவனது வெண்கொற்றக் குடையும், இடம் பெறுவது வழக்கமான ஒன்றாகும். 

ஆனால், இந்த நடுகல்லில் இடம் பெற்றுள்ள இந்த உருவம், ஏர்க்கலப்பை போன்றே காணப்படுகிறது. நிலத்துக்கு மேற்புறம் சுமார் 5 அடி உயரமும், 6 அடி அகலமும் கொண்டதாக இக்கல் அமைந்துள்ளது. 

இக்கல் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். குறும்பர் என்ற சொல் குறுநில மன்னரைக் குறிப்பதாகும். கண்டெடுக்கப்பட்ட நடுகல், இந்த பகுதியை ஆட்சிய செய்த குறுநில மன்னனுக்காக எடுக்கப்பட்ட கல்லாக இருக்கலாம்.

இதனருகே, 100 மீட்டர் தொலைவில் கல்வெட்டும் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில் தெலுங்கு மொழியில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில், எழுத்துகள் சிதைந்துள்ளதால் முழுமையாக படிக்கமுடியவில்லை. எனவே, இன்றைய தலைமுறையினர் வரலாற்று ஆவணங்களை அறிந்து கொள்ள, வரலாற்று சிறப்புமிக்க நடுகல்லை தொல்லியல் துறையினர் பாதுகாக்க வேண்டும்” என்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close