[X] Close

‘வாட்ஸ்ஆப்’ மூலம் குற்றம் தடுப்பு நடவடிக்கை: காவல் ஆய்வாளர் புதிய முயற்சி


whatsapp-complaint

  • kamadenu
  • Posted: 27 Jun, 2018 15:05 pm
  • அ+ அ-

மதுரையில் சமூக வலைதளமான வாட்ஸ் ஆப் மூலம் குற்றங்களை தடுக்கும் முயற்சியில் மதுரை காவல் ஆய்வாளர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

மதுரை நகர் காவல் ஆணையராக பொறுப்பேற்ற டேவிட்சன் தேவாசீர்வாதம் நகரில் குற்றச் சம்பவங்களை தொழில்நுட்ப ரீதியில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மதுரையில் குற்றச் செயல்களை கண்டுபிடிப்பதில் முக்கியத்துவம் காட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

சிக்னல் நிறுத்தம் உட்பட பொது இடங்களில் வாகன ஓட்டுநர்கள் விதிகளை மீறினால் குற்ற நிகழ்வை பதிவு செய்துவிட்டு, பிறகு நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கி உள்ளார். 

குறிப்பாக, பொதுமக்களுடன் இணைந்து வழிப்பறி போன்ற குற்ற நிகழ்வுகளை தடுக்கலாம் என காவல் ஆணையர் தெரிவித்த நிலையில், மதுரை நகர் தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் நாகராஜன் பொதுமக்களுடன் இணைந்து செயல்படுவதோடு, சட்டம், ஒழுங்கு, குற்றத்தடுப்புக்குரிய தகவல்களை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக ‘தெப்பக்குளம் காவல் ஆய்வாளருடன் பொதுமக்கள்’ என்ற புதிய ‘வாட்ஸ் ஆப்’ குரூப் ஒன்றை உருவாக்கி உள்ளார். 

அதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள், போலீஸார் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். இந்த வாட்ஸ் ஆப் குரூப்பை தொடங்கிய ஓரிரு நாளிலேயே நூறுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர். மேலும், தெப்பக்குளம் பகுதியிலுள்ள கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், முதல்வர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். ‘‘சிலர் எங்களை குரூப்பில் இணைத்துக் கொள்ளுங்கள். குற்றச் சம்பவம் பற்றி தகவல் தருகிறோம்,’’ என ஆர்வம் காட்டுகின்றனர். தினமும் குற்றத் தடுப்பு தொடர்பான பதிவுகள் பகிரப்படுகின்றன. வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்க, பல்வேறு விழிப்புணர்வு தகவல் பதிவிடப்படுகிறது. 

 ஜன்னல், கதவுகளை திறத்து வைத்து தூங்குவதை தவிர்த்தல், அடையாளம் தெரியாதவர்கள் நடமாட்டம் போன்ற தகவல் இருந்தால் ‘வாட்ஸ் ஆப்’ அல்லது காவல் நிலையம், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பதிவுகளை காவல் ஆய்வாளர் நாகராஜன் அவ்வப்போது பதிவிடுகிறார். பிற இடங்களில் நடந்த குற்றச் சம்பவ பதிவுகளை உதாரணமாக காட்டி பொதுமக்களை எச்சரிக்கிறார். 

இக்குரூப்பில் தெப்பக்குளம் மட்டுமின்றி, நகரில் பல்வேறு இடங்களில் நடக்கும் குற்றச் செயல் பற்றிய தகவலும் வருகிறது. சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்தி மதுரை நகரில் குற்றச் சம்பவங்களை குறைக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆய்வாளர் நாகராஜன் கூறியதாவது: இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் வழிப்பறி, திருட்டு உட்பட குற்றங்களை தடுப்பது மட்டுமே. ஓரிடத்தில் வழிப்பறி, பூட்டு உடைப்பு, கைகலப்பு போன்றவை நடந்தால் உடனே பதிவிட வேண்டும். சங்கிலி பறிப்பு, சந்தேக நபர்கள் பற்றி பகிரலாம். இந்த குரூப்பில் இணைந்தவர்கள் குற்றச் சம்பவங்களை தெரிவித்து போலீஸுக்கு ஒத்துழைக்க வேண்டும். தேவையில்லாத தகவல்களை பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

- என்.சன்னாசி

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close