[X] Close

பாரத மாதா ஆலயம் அனைவரும் வழிபடும் தலமாக வேண்டும்


bharatha-mata-temple

பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள சிவா மணி மண்டப வளாகம்

  • kamadenu
  • Posted: 27 Jun, 2018 14:55 pm
  • அ+ அ-

பாப்பாரப்பட்டியில் அமைய உள்ள பாரத மாதா ஆலயம் சாதி, மத பேதமின்றி அனைவரும் வழிபடும் தலமாக வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் பிறந்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா. இந்திய விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்த சிவா, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தொழுநோய் பாதிப்புக்கு உள்ளானார். இதற் கிடையில் தருமபுரி வந்த சிவா, பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த சின்னமுத்து என்பவரிடம் 6.21 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். தான் வாங்கிய நிலத்தில் பாரதமாதா கோயில் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வந்தார். இதற்காக 1923-ம் ஆண்டு சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து அடிக்கல் நாட்டச் செய்தார். 

இதற்கிடையில் உடல்நலம் பாதித்து 1925-ம் ஆண்டு ஜூலை மாதம் சிவா மறைந்தார். பாரத மாதா கோயில் அமைக்க அவர் வாங்கிய நிலத்திலேயே சிவாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டு சிவா மணி மண்டபம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 2011-ம் ஆண்டு மணிமண்டபம் திறக்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 25-ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த செய்தி மக்கள் தொடர்புத் துறை மீதான மானியக் கோரிக்கையின்போது பாரத மாத ஆலயம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டார். இந்த பணிகளுக்காக ரூ.1.5 கோடி நிதியும் அறிவித்தார். பாரத மாதா ஆலயம் அமைக்க வலியுறுத்தி வந்த பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.

சுப்பிரமணிய சிவா எழுதிய பல்வேறு கடிதங்களை தேடி தொகுத்து, ‘சிவாவின் கடிதங்கள்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார் தருமபுரியைச் சேர்ந்த சிசுபாலன். அவர் இதுபற்றி கூறும்போது, ‘பாரத மாதா ஆலயம் அமைக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற் கிறோம். சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் வழிபடும் இடமாக பாரத மாதா ஆலயம் அமைய வேண்டும் என சுப்பிரமணிய சிவா விரும்பினார். அவரது விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்றார்.

‘தியாகி சுப்பிரமணிய சிவா பேரவை’ என்ற அமைப்பின் அமைப்புக்குழு உறுப்பினரான பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த சின்ன சாமி கூறியது:

சுப்பிரமணிய சிவா விலை கொடுத்து வாங்கிய நிலத்தில் அரசு தேவைகளுக்காக ஆக்கிரமிப்பு செய்து சில கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அவர் பெயரில் உள்ள நிலம் முழுக்க பாரத மாதா ஆலய வளாகமாக மாற வேண்டும். சாதி, மதங்களைக் கடந்து, ஒவ்வொருவரும் நேரடியாக வழிபடும் இடமாக பாரத மாதா கோயில் திகழ வேண்டுமென சிவா விரும்பினார். மேலும், இந்த கோயில் எவ்வாறு அமைய வேண்டுமென்ற தனது விருப்பங்கள் சிலவற்றை உயில் மூலம் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலை கண்டறிந்து அதற்கேற்ப இந்த ஆலயத்தை அமைக்க வேண்டும். 

இவ்வாறு கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close