[X] Close
 

‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி மதுரை வருகிறார்


aiims-madurai-modi

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடம் | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

  • kamadenu
  • Posted: 27 Jun, 2018 14:52 pm
  • அ+ அ-

மதுரை ‘எய்ம்ஸ்’ அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி, முதல்வர் கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களை அழைத்து பிரமாண்டமாக விழா நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. 

‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மிக விரைவில் நடக்க இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த விழாவில் பங்கேற்பவர்கள் விவரம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்தத் திட்டம், மத்திய அரசு சார்ந்த திட்டம் என்பதால் பிரதமரையும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், இணை அமைச்சர் மற்றும் சில அமைச்சர்களை அழைத்துவரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநில அரசு தரப்பில் தற்போது வரை முதல்வர் பழனிசாமியையும், சுகாதாரத்துறை மத்திய அமைச்சரை மட்டும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரவழைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரூ.590 கோடியில் செங்கல்பட்டில் தேசிய ஒருங்கிணைந்த தடுப்பு மருந்து வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு நோய்த் தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட உள்ளன. ஒரு மாதத்தில் இந்த வளாகப் பணிகள் நிறைவடைய உள்ளன. அந்த வளாகத்தை திறந்துவைக்க பிரதமர் வருகிறார். இதை ஏற்கெனவே சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதனால், அப்போது மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவையும் சேர்த்து நடத்த வாய்ப்புள்ளது.

அதனால், இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னண் மற்றும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் விழா ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

அதற்குள்ளாக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. அந்த திட்ட அறிக்கை தயார் செய்யும் மத்திய குழுவினர், ஓரிரு நாளில் மதுரைக்கு வர உள்ளன. அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்பாக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தேர்வாகியுள்ள தோப்பூர் இடத்துக்கு இணைப்புச் சாலைகள் அமைப்பது, குறைந்த உயரத்தில் செல்லும் மின் கம்பங்களை அகற்றுவது உள்ளிட்ட அடிப்படை பணிகள் தொடங்கி உள்ளன. 

தோப்பூரில் சமப்படுத்தும் பணி

தோப்பூரில் ‘எய்ம்ஸ்’க்கு தேர்வான 198 ஏக்கரிலும் வளமான செம்மண் உள்ளது. இந்த மண்ணை கடந்த காலத்தில் 3 அடி முதல் 5 அடி வரை ஆங்காங்கே ஆழமாக தோண்டி எடுத்துள்ளனர். அதனால், இந்த இடம் மேடு, பள்ளமாக காணப்படுகிறது. அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்பாக இந்த 198 ஏக்கரையும் ஒரே அளவாக சமப்படுத்தும் பணிகளையும் நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close