[X] Close

450 டன் எடை, 85 அடி உயரம்: நெல்லையப்பர் தேருக்கு சறுக்கு கட்டைபோடும் சவாலான பணி


thirunelveli-temple-temple-car

நெல்லையப்பர் ஆனித் தேரோட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் தேரில் வடம் பொருத்தும் பணி நடைபெற்றது. | படங்கள்: மு.லெட்சுமி அருண்

  • kamadenu
  • Posted: 26 Jun, 2018 12:48 pm
  • அ+ அ-

திருநெல்வேலியில் நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டம் நாளை (27-ம் தேதி) நடைபெறவுள்ள நிலையில், ரதவீதிகளில் தேர் வலம்வந்து நிலையம் திரும்புவதற்கு சறுக்கு கட்டைபோடும் சவாலான பணியில் 3-வது தலைமுறையாக ஈடுபடுகிறார் நெ.சங்கர்(44).

தென் மாவட்டங்களில் புராதன சிறப்புமிக்க நெல்லையப்பர் திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இக்கோயில் கோபுரங்கள் 1626-ல் கட்டப்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டுக்கான தேரோட்டம் நாளை நடைபெறவுள்ளது. 

மூன்றாவது பெரிய தேர் 

கடந்த 25ஆண்டுகளுக்கு முன் 13 அடுக்குகளாக தேர் அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்று வந்தது. ஆனால், தேரோட்டத்தின் போது காற்றின் காரணமாக தேர் சாய்ந்த நிலையில் வருவதுபோல் தோன்றியது. 

இதனால் தேரின் உயரம் ஒன்பது அடுக்காக குறைக்கப்பட்டது. தற்போது ஐந்து அடுக்குகளாக ஆக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்கள் புல்டோசர் மூலமே தள்ளப்பட்டு இழுக்கப்படுகின்றன. 

ஆனால், நெல்லையப்பர் கோயில் தேர் பக்தர்களால் மட்டுமே இழுக்கப்பட்டு வருகிறது. இக் கோயிலின் சுவாமி தேர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகும். 

ரதவீதிகளில் தேரோட்டத்தை காணவும், தேரை வடம்பிடித்து இழுக்கவும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வர். ஆனால், சுவாமி தேர் ரதவீதிகளில் வலம்வந்து, 4 திருப்பங்களிலும் சரிவர திரும்பி, நிலையம் வந்தடைவதற்கு பலர் முக்கிய பணியாற்றுகின்றனர். 


சகோதரர் பாலசுப்பிரமணியனுடன் சங்கர்(வலது)

முக்கிய கதாநாயகன் 

தேர் ரதவீதி முக்குகளில் திரும்புவதற்கு சறுக்கு கட்டை போடும் சவாலான பணியை மேற்கொண்டுவருகிறார் சங்கர். தேரோட்டத்தின் முக்கிய கதாநாயகராக இவரை கொண்டாடலாம். இதற்குமுன் இப்பணியில் இவரது தாத்தா சுப்பையா, தந்தை நெல்லையப்பன் ஆகியோர் ஈடுபட்டுவந்தனர். 3-வது தலைமுறையாக சங்கர் ஈடுபடுகிறார். 

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கட்டாரங்குளம் என்ற இடத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தனது தந்தையுடன் 1985-ம் ஆண்டிலேயே கோயில் பணிக்கு வந்துவிட்டார். அவரிடமிருந்து கற்ற நுணுக்கங்களால் தேரோட்டத்தின்போது சறுக்குகட்டையை நேர்த்தியாக போட்டு தேரை ரதவீதிகளில் திருப்பும் பணியில் ஈடுபடுகிறார். இவரது தம்பி பாலசுப்பிரமணியன் இவருக்கு துணையாக பணியாற்றுகிறார்.

கடினமான பணி

இதுதொடர்பாக பக்தர்கள் கூறும்போது, “தேர் புறப்படுவதில் இருந்து நிலையம் வந்து சேரும்வரை சவாலான பணிகள் அதிகம் உள்ளன. தேரை சரியான பாதையில் திருப்பி, திருப்பி கொண்டுவந்து சேர்ப்பது மிகவும் கடினமான பணி. அனுபவம் இல்லாத யாரும் இதை செய்துவிட முடியாது.

தேரின் பின்புற இரண்டு சக்கரத்தையும் தடியின் உதவியுடன் அசைத்து கொடுக்கும் பொறுப்பில் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள். ஆனாலும் சறுக்கு கட்டை (சக்கை) போடுபவரின் வேலையே முக்கியமானது. 

கடந்த காலங்களில் தேர் வாரக் கணக்கில் ரதவீதிகளில் நிறுத்தப்பட்டு, பின்னர் அருகிலுள்ள ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், மணிமுத்தாறு பட்டாலியன் காவலர்களை கொண்டு இழுக்கப்பட்டு நிலையம் வந்து சேர்க்கப்படும். ஆனால் சமீப காலமாக சிலமணி நேரங்களில் தேர் நிலையம் கொண்டுவந்து சேர்க்கப்படுகிறது. இதற்கு சறுக்கு கட்டை போடுவதும், தடிபோடும் பணியும் முக்கியமானதாகும்” என்று தெரிவித்தனர்.

10 நாள் விரதம்

சங்கரிடம் பேசியபோது, “450 டன் எடையுள்ள சுவாமி தேர் அலங்காரம் செய்யப்படாமல் 30 அடி உயரத்துடனும், கோபுரம் அமைத்து அலங்காரம் செய்யப்பட்டபின் 85 அடி உயரத்துடனும் இருக்கும். தேரோட்டத்துக்கு முன்னதாக தேர்களை தயார்படுத்தும் பணியிலும் நாங்கள் ஈடுபடுகிறோம்.

இதற்காக 10 நாட்கள் விரதம் இருக்கிறோம். சுவாமி தேரை இழுக்க பயன்படுத்தும் 150 அடி நீள வடத்தை, தேரோட்டத்துக்கு முந்தைய நாட்களில் தயார்படுத்தி தேரில் சுற்றுவோம். 50 அடி நீள வடம் தேரில் சுற்றப்பட்டுவிடும், 100 அடி நீள வடத்தை பக்தர்கள் பிடித்து இழுக்க பயன்படுத்துவார்கள். சறுக்கு கட்டை போடும் பணியை 3-வது தலைமுறையாக மேற்கொள்வதற்கு ஆண்டவன் அருள்புரிந்துள்ளான்” என்று தெரிவித்தார்.

 நோன்பு கஞ்சி

தேரோட்டம் நடைபெறும் மேற்கு ரதவீதியில் உள்ள பள்ளிவாசலைச் சேர்ந்த நெல்லை அய்யூப் கூறும்போது,

 “தேரோட்ட காலங்களில் முஸ்லிம்களின் நோன்பு மாதமும் சேர்ந்தாற்போல் வருமானால், டவுன் மேலரதவீதியிலுள்ள முஸ்லிம்களின் தொழுகை பள்ளி வாசலில் தேரோட்டம் அன்று மாலையில் தேர் இழுக்கவும், தேரோட்டத்தை பார்க்கவும் வருவோருக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது. சமய நல்லிணகத்துடன் மக்கள் இருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது” என்றார் அவர்.

- அ.அருள்தாசன்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close