[X] Close

வறட்சியில் 2,025 குளங்கள்: நெல்லை அணைகளில் 43 சதவீத நீர் இருப்பு 


water-drought-in-thirunelveli

வறண்டு கிடக்கும் பேட்டை பெட்டைக்குளம் | படம்: மு.லெட்சுமி அருண்

  • kamadenu
  • Posted: 25 Jun, 2018 12:51 pm
  • அ+ அ-

திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதத்தில் இயல்பான அளவை விட அதிகமாக மழை பெய்திருந்தும் மொத்தமுள்ள 2,518 குளங்களில் 2,025 குளங்கள் வறண்டிருப்பது வேளாண் துறை புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பான மழையளவு 814.80 மி.மீ. கடந்த 2015-ம் ஆண்டில் 1421.07 மி.மீ. மழை பெய்திருந்தது. இது இயல்பான மழை அளவைவிட 74.4 சதவீதம் அதிகம். கடந்த 2016-ம் ஆண்டில் 396.88 மி.மீ. மழை மட்டுமே பெய்தது. இது இயல்பைவிட 51.3 சதவீதம் குறைவு. கடந்த ஆண்டில் 1090.99 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பைவிட 33 சதவீதம் அதிகம். 

மாதவாரியாக மழையளவு

கடந்த ஜனவரி மாதத்தில் இயல்பான மழையளவான 50.2 மி.மீ.-ல் 4.82 மி.மீ. மட்டுமே மழை பெய்தது. பிப்ரவரி மாதத்தில் 30.2 மி.மீ. இயல்பான மழையளவு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19.08 மி.மீ. மழை மட்டுமே பெய்தது. மார்ச் மாதத்தில் இயல்பான மழையளவு 41.3 மி.மீ. ஆனால் 100.11 மி.மீ. மழை பெய்தது. ஏப்ரலில் இயல்பான மழையளவு 59.8 மி.மீ. ஆனால் 85.82 மி.மீ. மழை பெய்திருந்தது. மே மாதத்தில் இயல்பான மழையளவு 38 மி.மீ.க்கு, ஆனால் 50.25 மி.மீ. மழை பெய்தது. இம்மாதத்தில் இயல்பான மழையளவு 29.6 மி.மீ. ஆனால், 69.92 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. கடந்த ஆண்டு இம்மாதத்தில் 46.68 மி.மீ. மழை மட்டுமே பெய்திருந்தது.

2,025/2,518

இயல்பைவிட அதிகமாக மழை பெய்திருந்தபோதும் 2,025 குளங்கள் வறண்டுகிடக்கின்றன. மாவட்டத்தில் 1,221 கால்வரத்து குளங்கள், 1,297 மானாவாரி குளங்கள் என்று மொத்தம் 2,518 குளங்கள் உள்ளன. 

அதில் 11 கால்வரத்து குளங்களில் 2 மாதமும், 424 கால்வரத்து குளங்களில் 1 மாதமும் தண்ணீர் இருப்பு உள்ளது. மீதமுள்ள 786 குளங்கள் வறண்டுள்ளன. மானாவாரி குளங்களில் 58-ல் ஒரு மாதத்துக்கான தண்ணீர் உள்ளது. மீதமுள்ள 1,239 மானாவாரி குளங்கள் வறண்டு கிடக்கின்றன. மொத்தமாக மாவட்டத்தில் 2,025 குளங்கள் வறண்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள கிணறுகளில் 3 மணிநேரம் முதல் 4 மணி நேரத்துக்கு பாசனம் மேற்கொள்ளும் அளவுக்கு நீர் உள்ளது.

அணைகள் நிலவரம்

மாவட்டத்தில் உள்ள 11 அணைகளிலும் தற்போது 43 சதவீதம் தண்ணீர் இருப்பதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 5 சதவீதம் நீர் மட்டுமே இருந்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 11 அணைகளில் தண்ணீர் மொத்த கொள்ளளவு 13,771 மில்லியன் கனஅடி. கடந்த ஆண்டு இதே காலத்தில் 676.8 மில்லியன் கனஅடி கொள்ளளவு தண்ணீர் மட்டுமே அணைகளில் இருந்தது. தற்போது 5,960.17 மில்லியன் கனஅடி கொள்ளளவு தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டைவிட தற்போது நீர் இருப்பு 38 சதவீதம் அதிகமாக இருக்கிறது.

அணைகளில் நேற்றைய நீர்மட்டம் (அடைப்புக்குள் கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம் விவரம்):

பாபநாசம்- 88.90அடி (32.35 அடி), சேர்வலாறு- 107.94 அடி ( 19.32 அடி), மணிமுத்தாறு- 85.75 (32.41), கடனா- 67.40 (45.70) , ராமநதி-78.25 (41.75), கருப்பாநதி- 70.95 (25), குண்டாறு- 36.10 (30.50 ), அடவிநயினார் கோயில்- 122 (41.75 ), வடக்குபச்சையாறு- 9.50 (3.25), கொடுமுடியாறு- 52.50 (2), நம்பியாறு-11.77 (6.86).

இலக்கு தாண்டிய பிசானம் 

மாவட்டத்தில் கடந்த பிசான பருவத்தில் 45 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கை தாண்டி 59,633 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. 

நடப்பு கார் பருவத்தில் மாவட்டத்தில் 24 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் இதுவரை 2,350 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. 

கரும்பு, பருத்தி 

இதுபோல் 2017-2018-ல் 15,700 ஹெக்டேரில் சிறுதானியங்கள் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதில் இதுவரை 1,315 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. 36,000 ஹெக்டேரில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அதில் 884 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 4000 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் 324 ஹெக்டேர் இலக்கு எட்டப்பட்டிருக்கிறது. 

5,500 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி இலக்கில் 324 ஹெக்டேரில் சாகுபடி எட்டப்பட்டிருக்கிறது. 3,940 ஹெக்டேரில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை 1,335 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. 

மொத்தமாக 2017-2018-ம் ஆண்டில் 1,38,140 ஹெக்டேரில் அனைத்து வகை பயிர்களும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் இதுவரை 6,819 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றுள்ளது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close