[X] Close

 ‘எய்ம்ஸ்’ அறிவிக்கப்பட்டதன் பின்னணி? - 3 ஆண்டு இழுபறிக்கு பிறகு மதுரைக்கு விமோசனம்


aiims-madurai

  • kamadenu
  • Posted: 21 Jun, 2018 11:58 am
  • அ+ அ-

மதுரையில் பல்வேறு போராட்டங்கள், சர்ச்சைகளுக்கு இடையே 3 ஆண்டுகால இழுபறிக்கு பிறகு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தின் நீண்டநாள் கனவுத் திட்டம் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்). கடந்த 15 ஆண்டுகால தமிழக அரசின் கோரிக்கைக்குப் பிறகு மதுரை தோப்பூரில் தற்போது இந்த மருத்துவமனை அமையவுள்ளது. தென் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், புற்றீசல்போல அதிகரித்தாலும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இன்னமும் அரசு மருத்துமனைகளுக்குத்தான் சிகிச்சைபெறச் செல்கின்றனர்.

உயிர் காக்கும் உயர் சிகிச்சைகளுக்கு, சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்குதான் அவர்கள் செல்ல வேண்டி இருந்தது. தற்போது அவர்களுக்கு வரப்பிரசாதமாக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைகிறது. இந்த மருத்துவமனை சாதாரணமாக மதுரைக்கு கிடைத்து விடவில்லை. 2015-2016-ம் ஆண்டு தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அறிவித்தது முதல் 3 ஆண்டு தொடர் போராட்டத்துக்கு பிறகே மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை சாத்தியமாகி உள்ளது. 

தமிழக அரசு பரிந்துரைத்த 5 இடங்களில் மதுரை தோப்பூரே தகுதி அடிப்படையில் ‘எய்ம்ஸ்’ பட்டியலில் முன்னிலையில் இருந்தது. ஆனால், மாநில அரசியல் குளறுபடிகளால் ஒரு கட்டத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரையை விட்டு கைநழுவும் அபாயம் ஏற்பட்டது. அப்போது தொழில் துறையினர், தன்னார்வ அமைப்புகள், வியாபாரிகள், மாணவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்தனர். திமுக மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் திருமங்கலத்தில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிமுகவை பொறுத்தவரை மாநில அரசு தலைமையும், மத்திய, வடமாவட்ட அமைச்சர்களும் தஞ்சாவூருக்கு எய்ம்ஸ்-ஐ கொண்டு செல்ல ஆர்வம் காட்டியபோது வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார், ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையாவிட்டால் ராஜினாமா செய்வேன், ’’ என்று பகிரங்கமாகவே அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். 

அவரை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா மற்றும் மற்ற தென் மாவட்ட அமைச்சர்களும், எம்எல்ஏ-க்களும் மதுரையில் எய்ம்ஸ் அமைய குரல் கொடுத்தனர்.

மதுரை மக்களவை எம்பி கோபாலகிருஷ்ணன், நேரடியாக போராட்டத்தில் பங்கேற்கா விட்டாலும் மதுரை சிறு, குறு தொழில்துறையினர், மதுரை எய்ம்ஸ் மருத்துமனைக்கான மக்கள் இயக்கத்தினர் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், இணை அமைச்சர், செயலாளரை சந்திக்க ஏற்பாடு செய்து உதவியாக இருந்தார்.

 கம்யூனிஸ்ட் கட்சியினர், எய்ம்ஸ்-க்காக உண்ணாவிரதம், போராட்டங்களில் நேரடியாக பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்காகவே ‘மதுரையில் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம்’ உருவாக காரண கர்த்தாவாக இருந்தார். அவரது மேற்பார்வையில் இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தலைமையில் 25 அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கு அவர்கள் மிகப்பெரிய அழுத்தம் கொடுத்ததோடு பொதுமக்களிடம் உயர் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு கிடைப்பதாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேலு, தலைவர் என்.ஜெகதீசன் மற்றும் அந்த அமைப்பினர் தொடர்ச்சியாக டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து மதுரையில் ‘எய்ம்ஸ்’ அமைவதன் அவசியத்தை வலியுறுத்தினர். மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக போராட்டங்கள் நடக்கும்போது சிறு, குறு தொழில் துறையினர் உற்பத்தியை பார்க்காமல் அன்று விடுமுறை விட்டு தொழிலாளர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் போராட்டங்களில் பங்கெடுக்க வைத்தனர். 

ஒட்டுமொத்த தென் மாவட்ட மக்கள், தொழில் துறையினர் அழுத்தத்தால் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதன் செயலாளர்களிடம் தகுதி அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் மதுரையில் ‘எய்ம்ஸ்’ அமைய வலியுறுத்தினர். அதனால், நீண்ட பெரும் போராட்டத்திற்கு பிறகு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க இருப்பதாக மத்திய அரசுஅறிவித்துள்ளது.

- ஒய்.ஆண்டனி செல்வராஜ்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close