[X] Close

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தண்ணீர் வரத்து:  இயற்கை எழில் கொஞ்சும் அவலாஞ்சி - தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி


avalanche-rains-greenery

தொடர் மழையால் தண்ணீர் தேங்கி காணப்படும் இயற்கை எழில் கொஞ்சும் போர்த்திஹாடா பகுதி | படம்: ஆர்.டி.சிவசங்கர்

  • kamadenu
  • Posted: 21 Jun, 2018 11:51 am
  • அ+ அ-

தொடர் மழை காரணமாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவலாஞ்சி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தண்ணீர் வரத்து காணப்பட்டதால், விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால், முக்கிய அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்தது. இதனால் மின் உற்பத்திக்கு சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, மின் உற்பத்திக்கு முக்கியமான அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்தது. 

தண்ணீர் வரத்து இல்லாமல், அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மேய்ச்சல் நிலமாக காணப்பட்டன. விவசாயப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகளும், அவலாஞ்சியின் இயற்கை எழிலை காண முடியாமல் சுற்றுலா பணிகளும் ஏமாற்றம் அடைந்து வந்தனர். 

இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் தொடக்கத்தில் இருந்தே உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, மஞ்சூர் என மாவட்டத்தில் பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்வதால், நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால், 3 ஆண்டுகளுக்குப் பின்னர் அவலாஞ்சி அணையின் நீர்மட்டம் 142 (171) அடியாக உயர்ந்துள்ளது. 

மேய்ச்சல் நிலமாக காணப்பட்ட அவலாஞ்சி நீர்ப்பிடிப்புப் பகுதியான போர்த்திஹாடாவில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. இதைக் கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இயற்கை எழிலை காண, போர்த்திஹாடா பகுதியை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டு வருகின்றனர். 

மழை காரணமாக பசுமையான தேயிலைத் தோட்டங்களை சூழ்ந்த கருமேகங்களும், நீல நிறம்போல் காணப்படும் தண்ணீரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இதனை கண்களாலும், கேமராக்களாலும் படம் பிடித்துச் செல்கின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close