[X] Close

கடலில் யோகா: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம்


yoga-in-the-sea

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடற்கரையில் அலைச் சறுக்கு பலகையில் ஆர்வமுடன் யோகா செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

  • kamadenu
  • Posted: 21 Jun, 2018 11:49 am
  • அ+ அ-

யோகா கலையை உருவாக்கிய பதஞ்சலி சித்தர் சமாதி அடைந்த ராமேசுவரத்தில், கடல் மேல் அமர்ந்து யோகா செய்ய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்திய பண்பாட்டின் விலை மதிக்க முடியாத பரிசு யோகா. இது உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கிறது. சர்வதேச யோகா தினத்தை அறிவிக்க வேண்டும் என ஐ.நாவில் இந்தியா கோரிக்கை வைத்தபோது 47 முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட 177 நாடுகள் ஆதரவு அளித்தன. 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. சபை வரலாற்றிலேயே, வேறெந்த கோரிக்கைக்கும இத்தகைய ஆதரவு கிடைத்தது இல்லை. ஜூன் 21-ம் நாளை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது.

அதன்படி, முதல் சர்வதேச யோகா தினம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி புதுடெல்லி ராஜபாதையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஓகம் கலையை உருவாக்கிய பதஞ்சலி சித்தர் சமாதி அடைந்த ராமேசுவரத்தில், கடல் மேல் அமர்ந்து யோகா செய்ய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.


ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள பதஞ்சலி சித்தர் சமாதி

இதுகுறித்து ராமநாதபுரம் மனவளக்கலை யோகா பயிற்றுநர் தரணி முருகேசன் கூறியது:

பதஞ்சலி சித்தர் உருவாக்கிய ஓகம் கலை இன்று சர்வதேச அளவில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஓகம் என்றால் தமிழில் தவம் என்று அர்த்தம். நம்முடைய தமிழில் ஓகம் என்ற சொல்தான், இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம். 

ராமேசுவரம் தீவில் உள்ள மன்னார் வளைகுடா கடல் பிராந்தியமும், பாக் ஜலசந்தி கடல் பிராந்தியமும், பாம்பன் கால்வாயும் நீச்சல், துடுப்புப் படகு, பெடல் படகு, அலைச் சறுக்கு உள்ளிட்ட நீர் விளையாட்டுப் போட்டிகள் விளையாட இந்தியாவில் சிறந்த இடமாக கண்டறிப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் ராமேசுவரத்தில் நீர் விளையாட்டுக்கள் விளையாடி மகிழ்வதற்காக ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு நீர்விளையாட்டிற்காக வரும் சுற்றுலா பயணிகள் கடல் தண்ணீரில் உடற்பயிற்சி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக கடலில் ஜலயோகா மற்றும் அலைச்சறுக்கு பலகைகளில் அமர்ந்து யோகா செய்து மகிழ்கின்றனர். 

தினந்தோறும் தண்ணீரில் மிதந்து செய்யப்படும் ஜல யோகாசனம் செய்வதன் மூலம், பிராணவாயு உடலில் சீராக பரவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்துக் கொள்ள முடியும். நீச்சல் பயிற்சி இல்லாமல் கூட ஜலயோகாசனம் மூலம் தண்ணீரில் மணிக்கணக்கில் மிதக்க முடியும். அலைச் சறுக்கு பலகை தண்ணீரில் நன்றாக மிதக்கக் கூடியது. அலைச் சறுக்கு பலகையில் சிறிய ஆசனங்கள் செய்து கற்றுக் கொண்ட பின் நுணுக்கமான ஆசனங்களையும் செய்யலாம். கடலில் யோகா செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமும் மன வலிமையும் அதிகரிக்கும்.


 

யோகா பயிற்றுநர் தரணி முருகேசன்

ஓகம் கலையை உருவாக்கிய பதஞ்சலி சித்தர் சமாதி அடைந்த இடம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ளது. இதனால் ராமேசுவரத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடல் மேல் அமர்ந்து யோகா செய்ய ஆர்வம் காட்டுவதில் ஆச்சர்யமில்லை என்றார்.

- எஸ். முஹம்மது ராஃபி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close