[X] Close
 

பொறியியல் மோகம் குறைவு; ‘நீட்’ தேர்வு குழப்பத்தால் கலைக் கல்லூரிகளில் சேர கடும் போட்டி


arts-and-science-courses

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 20 Jun, 2018 12:50 pm
  • அ+ அ-

பொறியியல் மோகம் குறைவு, ‘நீட்’ தேர்வால் இந்த ஆண்டு கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். பெரும்பாலான கல்லூரிகளில் இளங்கலை தமிழ், ஆங்கில பாடப்பிரிவில் சேர அதிக ஆர்வம் காட்டியதாக கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 80-க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 600-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் ஏராளமான சுயநிதிக் கல்லூரிகள் செயல்படுகின்றன. பொறியியல் கல்லூரிகளை ஒப்பிடும்போது, கலை அறிவியல் கல்லூரிகள் குறைவுதான். ஆனால் வேலைவாய்ப்பின்மையால் பொறியியல் படிப்பு மீதான மோகம் தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. மருத்துவப் படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கட்டாயம். இதற்கான பயிற்சியில் சேர கிராமப்புற மாணவர்களால் முடியாத நிலையில் மாணவர்களுக்கு ஒரே வழி கலை, அறிவியல் கல்லூரிகள் மட்டும்தான். 

அந்த வகையில் இந்த ஆண்டு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டினர். ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு காலியிடத்துக்கு 5 அல்லது 6 பேர் விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. குறிப்பாக தமிழ், ஆங்கில இலக்கியம், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர அதிகமானோர் விண்ணப்பித்தனர். பிளஸ் 2 படித்தவர்களே கம்ப்யூட்டர்களின் பணியை செய்வதால், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவு சில கல்லூரிகளில் பின்னுக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டது. அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஏறக்குறைய மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. 

முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கி இருக்கின்றன. ஒவ்வொரு கல்லூரியிலும் மதிய ஷிப்டிலும் காலியிடங்கள் நிரம்பின. மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் (பொறுப்பு) சி. ஜோதி வெங்கடேசன் கூறியது: 

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

இந்திய அளவிலும் உயர் கல்வியில் தமிழகம் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. பொறியியல் உட்பட தொழில்நுட்ப படிப்புகளை முடித்தவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பின்மையே இதற்கு காரணம். 

இளங்கலை, அறிவியல், வணிகவியல், வணிக நிர்வாகம் போன்ற பாடங்களில் சேர்வதால் அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளை எளிதில் எழுத முடிகிறது. ஆங்கிலம், தமிழ் இலக்கியம், அறிவியல் டிகிரி படித்து, பிஎட் முடித்தால் ஆசிரியர் பணியில் சேரலாம் என பெற்றோர் நினைக்கின்றனர். 


சி. ஜோதி வெங்கடேசன்

பி.காம், பிபிஏ, எகனாமிக்ஸ் படித்தால் வங்கித் துறையில் மார்க்கெட்டிங் பணி வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தமிழ் இலக்கியம் படித்தால் ஊடகம், திரைப்படத் துறையில் பணிவாய்ப்பு உள்ளது. ஐஏஎஸ் போன்ற தேர்வுகளை தமிழில் எழுதலாம். 

இதுபோன்ற சூழலில் தமிழ் இலக்கியப் பாடத்தில் சேர அனைத்து அரசு கல்லூரிகளிலும் அதிகளவு போட்டி இருந்தது. கவுன்சிலிங் தொடங்கிய குறிப்பிட்ட நேரத்தில் பெரும்பாலான பாடப் பிரிவுக்கு அட்மிஷன் முடிந்தது. சில கல்லூரிகளில் 2-வது ஷிப்ட் மற்றும் சுயநிதி பிரிவிலும் தமிழ், ஆங்கில பாடத்தில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டினர். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மொழிப் பாட ஆசிரியர்கள் தேவை அதிகரிப்பால் பிஎட், டிஇடி தேர்வெழுதி விரைவில் பணிக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் சேர்கின்றனர். இதுவும் உண்மைதான்.

பெண்களுக்கு ஆசிரியர் பணி பாதுகாப்பானது என விரும்பி மொழிப் பாடப் பிரிவுகளை ரெகுலர், சுயநிதி பிரிவிலும் சேர ஆர்வம் அதிகரிப்பால் போட்டி இருந்தது. போட்டித்தேர்வு எழுதி அரசு பணிக்கு செல்ல விரும்புவோர் இளநிலை பொருளாதாரம், வரலாறு பாடங்களை தேர்ந்தெடுத்து சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு கல்லூரியிலும் உட்கட்டமைப்பு வசதியை பொறுத்து, ஒரு வகுப்பில் 60 அல்லது 70 மாணவர்களை மட்டுமே சேர்க்கலாம். இந்த ஆண்டு விரும்பி விண்ணப்பித்த ஏராளமானோருக்கு சீட் தர முடியாத சூழலும் ஏற்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- என். சன்னாசி

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close