[X] Close

இன்று உலக அகதிகள் தினம்: உயிரை பணயம் வைத்து இலங்கைக்கு பயணிக்கும் அகதிகள் அதிகரிப்பு


world-refugee-day

மண்டபம் அகதிகள் முகாம்

  • kamadenu
  • Posted: 20 Jun, 2018 12:46 pm
  • அ+ அ-

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகுகளில் உயிரை பணயம் வைத்து பயணிக்கும் அகதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபம் அகதிகள் முகாம்தான் மிகப் பெரியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ராணுவத்தினருக்கான முகாமாக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. பின்னர், இலங்கையில் இருந்து அடைக்கலம் தேடிவரும் தமிழர்களை தங்கவைக்கும் இடமாக மாறிவிட்டது. மண்டபம் அகதிகள் முகாமில் தற்போது 539 குடும்பங்களில் ஆண்கள் 680 பேர், பெண்கள் 704 பேர், ஆண் குழந்தைகள் 183, பெண் குழந்தைகள் 193 பேர் என மொத்தம் 1,760 பேர் வசித்து வருகின்றனர்.

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் முடிந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், 'உலக அகதிகள் தின'த்தையொட்டி (ஜூன் 20) தமிழக முகாமில் உள்ள அகதிகள் குறித்த பதிவைக் காண்போம்

மண்டபம் முகாமுக்கு வெளியே வசித்து வரும் மயூரன் கூறியதாவது: தமிழக முகாம்களில் 3,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளனர். ஆனால், அவர்களின் படிப்பிற்கு ஏற்ப வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் பட்டதாரி அகதிகள் கூட கூலித் தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் அகதிகளாகவே வாழ முடியாது என்றார்.

ராமேசுவரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கண். இளங்கோ கூறியதாவது, ராமேசுவரம் அருகே இருக்கும் மண்டபம் முகாம் முதல் தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களிலும் முறையான அடிப்படை வசதிகள் கிடையாது. அகதிகள் வெளியூருக்குச் செல்ல வேண்டும் என்றாலோ, வேறு முகாம்களுக்கு செல்ல வேண்டும் என்றாலோ மண்டபம் முகாமிலுள்ள தனி ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தாலே போதும். ஆனால், தற்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. இதற்காக முயலும் முகாம் வாசிகள் அலைக்கழிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர், என்றார்.

அகதிகள் மறுவாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது,

அகதிகள் உரிய ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள அகதிகள் மறுவாழ்வுத்துறையில் சமர்ப்பித்து விண்ணப்பித்தால், இலங்கைக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 2017-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் மூலம் திரும்பிய 700 அகதிகள் இலங்கையின் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் அமைச்சகம் மூலம் வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்கு இங்குள்ள காவல்நிலையங்களில் ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர்களால் பாஸ்போர்ட், விசா முறைகளை பின்பற்றி இலங்கை செல்ல முடியாது. வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும். அவ்வாறு வழக்குகளில் சிக்கியிருக்கும் சிலர், தமிழகத்திலிருந்து படகுகளில் சட்டவிரோதமாக இலங்கை செல்கின்றனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு படகு மூலம் முறையான ஆவணங்கள் இல்லாமல், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்ற 27 அகதிகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.

- எஸ். முஹம்மது ராஃபி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close