[X] Close
 

கழிவுகளின் சங்கமமான சரவண பொய்கை: புனித நீராட முடியாமல் பக்தர்கள் வேதனை


saravana-poigai-pollution

குப்பைக் கூளங்கள் கொட்டப்படுவதால் மாசடைந்து பச்சை நிறமாக காட்சி அளிக்கும் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை | படம்: ஆர். அசோக்

  • kamadenu
  • Posted: 19 Jun, 2018 11:50 am
  • அ+ அ-

கழிவுகள் நிறைந்து குப்பை மயமாக திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை காட்சி தருவதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

முருகனின் அறுவடை வீடுகளில் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில், முதல் படை வீடாகும். இந்தக் கோயிலில் மட்டுமே முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் காட்சி தருகிறார். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. 

அதனால், இந்த கோயிலில் திருமணம் செய்தால் சிறப்பு என்பதால், தமிழகம் முழுவதும் இருந்து திருமணம் செய்ய வருகின்றனர். முகூர்த்த தினங்களில் திருமணங்கள் அதிகம் நடப்பதால், கட்டுக்கடங்காத கூட்டத்தால் திருப்பரங்குன்றமே திக்குமுக்காடும்.

ஆண்டின் 9 மாதங்களில் இங்கு திருவிழாக்கள் நடக்கின்றன. இதுதவிர வெளியூர், வடமாநில பக்தர்கள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் நடக்கும் பங்குனித் திருவிழா மிக விசேஷமானது. அன்று தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள். வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, ஆனி திருவிழா போன்ற விழாக்களும் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தற்போது ஆனி திருவிழா தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. 

மாசடைந்த சரவணப்பொய்கை

இந்தக் கோயிலின் அருகே உள்ள சரவணப் பொய்கை குளம் மிகவும் புனிதமானது. சபரிமலை, மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்த சரவணப் பொய்கையில் நீராடி செல்வதை புண்ணியமாகக் கருதுகின்றனர். ஆனால், தற்போது இந்த சரவணப் பொய்கை குளம், கழிவுகளால் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. கோயில் நிர்வாகம் சரவணப் பொய்கையை பராமரிக்க நடவடிக்கை எடுக்காததால் பக்தர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

இதுகுறித்து திருப்பரங்குன்றம் எஸ். செந்தில் கூறியதாவது: சரவணப் பொய்கையில் இருந்துதான், கடந்த காலத்தில் தினசரி கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய யானை மீது வெள்ளிக்குடத்தில் தண்ணீர் எடுத்துச் சென்றனர். கடந்த 7 ஆண்டாக இந்த வழக்கம் கைவிடப்பட்டது. லாப நோக்கில் குளத்தில் மீன்களை வளர்த்து அதை குத்தகை விட்டனர். அதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த ஆண்டு குத்தகைக்கு விடவில்லை. 

தற்போது குளத்தை பராமரிக்காமல் கைவிட்டனர். கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களில் பலர் துர்நாற்றம் வீசினாலும் பரவாயில்லை என்று நீராடித்தான் செல்கின்றனர். பக்தர்கள் கழிப்பிடம் செல்வதற்கு போதிய கழிப்பிடங்கள் இல்லை. அதனால், திருப்பரங்குன்றம் வரும் பக்தர்கள் கோயிலை சுற்றியுள்ள இடங்களை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். வீட்டுக்கு ஒரு கழிப்பிடம், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மதுரையை மாற்ற முயற்சி செய்யும் மாவட்ட நிர்வாகம், ஒரு முறை திருப்பரங்குன்றத்தில் இந்த குளத்தையும், அதன் சுற்று பிரகாரத்தையும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். குளத்தில் ஒரு புறம் பக்தர்கள் குளிப்பார்கள். மற்றொரு புறம் கழிப்பிடம் சென்றுவிட்டு வந்து கழுவுவார்கள். குப்பைகளையும், பிளாஸ்டிக்குகளையும், உணவு கழிவுகளையும் கொட்டுகிறார்கள் என்றார்.

கோயில் நிர்வாக அதிகாரி (பொ) மாரிமுத்துவிடம் கேட்டபோது, ‘‘கடந்த வாரம்தான் சரவணப் பொய்கையை சுத்தம் செய்தோம். தற்போது, நிரந்தரமாக சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கழிப்பிட அறைகளை பராமரிக்க மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்’’ என்றார்.

நிர்வாக அதிகாரி பணியிடம் காலி

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வரும் புண்ணிய தலமான திருப்பரங்குன்றம் கோயிலுக்கு நிரந்தர கோயில் நிர்வாக அதிகாரி இல்லை. இதற்கு முன் இருந்த செயல் அலுவலர் சென்னைக்கு பணி மாறுதலாகி சென்றுவிட்டார். அவருக்கு பதிலாக தற்போது வரை நிர்வாக அதிகாரி நியமிக்கப்படவில்லை. அழகர்கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து பொறுப்பு செயல் அலுவலராக திருப்பரங்குன்றம் கோயிலையும் கவனிக்கிறார். அவரால் தினமும் கோயிலுக்கு வந்து செல்ல முடியவில்லை. முழுமையாக கண்காணிக்க முடியவில்லை.

- ஒய். ஆண்டனி செல்வராஜ்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close