[X] Close
 

பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஒலி, ஒளியுடன் நவீன ஊன்றுகோல்கள்: மதுரை ‘அப்துல் ரசாக்’ கண்டுபிடிப்பு


differently-abled-support

தான் கண்டுபிடித்த நவீன ஊன்றுகோலுடன் விஞ்ஞானி அப்துல்ரசாக். (நடுவில் இருப்பவர்)

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 18 Jun, 2018 12:11 pm
  • அ+ அ-

மதுரையைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல் ரசாக், பார்வையற்றோர் நடந்து செல்வதற்கு வசதியாக நவீன கைத்தடி (ஊன்றுகோல்) ஒன்றை கண்டுபிடித்துள்ளார். 

பகலில் ஒலியோடும், இரவில் ஒளியோடும் விழியிழந்தோருக்கு வழிகாட்டியாக இந்த ஊன்றுகோல் செயல்படுவதாக உபயோகித்தவர்கள் பாராட்டுகின்றனர்.

மதுரை சொக்கிகுளம் பகுதியில் வசிப்பவர் அப்துல் ரசாக், நீரழிவு நோயாளிக்கான சோறு பொங்கும் சிறப்பு குக்கர் உட்பட பல்வேறு கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். கடலில் கொட்டிய எண்ணெயைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், போர்வெல் குழிக்குள் விழும் குழந்தையைக் காப்பாற்ற உதவும் கருவி வரை 42-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார். மத்திய இன்னோவேஷன் பவுண்டேஷன் இவரை விஞ்ஞானியாக அங்கீகரித்து பாராட்டி உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பார்வையற்றோருக்காக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டார். இதற்காக பல்வேறு வகையில் சிந்தித்து தகவல்களை சேகரித்தார். இதன்படி ஒளி மற்றும் ஒலி எழுப்பும் நவீன கைத்தடியை கண்டுபிடித்துள்ளார். 

இந்த ஊன்றுகோல் குறித்து வெங்கடேசன் என்ற மாற்றுத்திறனாளி கூறியதாவது: 

மிக லேசான இந்த கைத்தடி, பகலில் நாங்கள் நடந்து செல்லும்போது ஒலி எழுப்பும் வசதியோடும், இரவில் ஒளியை உமிழும் வடிவமைப்போடும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாங்கள் நடந்து செல்லும்போது, அருகிலுள்ள நபர்களோ, வாகனங்களோ எங்கள் மீது மோதாமல் இருக்க வசதியாக உள்ளது. பயமின்றி தெருக்களில் நடந்து செல்ல முடியும். இதன்மூலம் நெடுஞ்சாலைகளை எளிதாகக் கடக்க முடியும் என்றார்.

மற்றொரு மாற்றுத்திறனாளி ஜெயபாலன் என்பவர் கூறியது: அண்மையில் நடந்து சென்றபோது வாகனம் ஒன்றின் மீது இடித்து விட்டேன். ஓட்டுநர் என்னைத் திட்டினார். பிற்கு, நான் பார்வையற்றவன் என்பதை உணர்ந்து வருத்தம் தெரிவித்தார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அப்துல்ரசாக், உடனடியாக இதுபோன்ற ஒரு ஸ்டிக்கை தயாரித்து எனக்கு பரிசாக வழங்கினார். அன்றில் இருந்து நான் மிகவும் பாதுகாப்பாக நடந்து செல்கிறேன் என்றார்.

விஞ்ஞானி அப்துல் ரசாக் கூறியதாவது: மிக லேசான இந்தக் கைத்தடி, தூக்கிச் செல்வதற்கு ஏற்ற வகையிலும், ஒலி எழுப்புகின்ற, ஒளி உமிழும் கருவியை கைப்பிடிக்கு அருகிலேயும் வடிவமைத்துள்ளேன். இதைப் பயன்படுத்தி பார்வையிழந்தவர்களால் மிக இயல்பாக நடந்து செல்ல முடியும். எனது சொந்த செலவில் 20 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த ஊன்றுகோல்களை வழங்கி உள்ளேன். இதன் அடக்க விலை ரூ.1000. மதுரையில் மட்டும் சுமார் 2500 பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அத்தனை பேருக்கும் செய்து தர எனக்கு வசதி இல்லை. இந்த ஸ்டிக், அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் பெரிதும் பயனுள்ள வகையில் இருப்பதாக எல்லோரும் கூறியுள்ளனர். 

யாரேனும் நிதியுதவி செய்தால், அடக்க விலையிலேயே அனைவருக்கும் இதை செய்து தர முடியும். முதலில் சோதனை முறையில், மூன்று பேருக்கு மட்டும் செய்து கொடுத்தேன். அவர்கள் முழுவதும் பயன்படுத்திப் பார்த்த பின்னர், அதிலுள்ள குறை நிறைகளை நிவர்த்தி செய்து, மேலும் 20 பேருக்குச் செய்து கொடுத்தேன். 

அனைவருமே இந்த ஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர். நிறைய பேர் என்னிடம் கேட்டுள்ளனர். போதிய நிதி ஆதாரம் இல்லாததால் செய்து தர இயலவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பார்வை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்ய நினைப்போர் விஞ்ஞானி அப்துல் ரசாக்-ஐ 9894905268 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close