[X] Close

தமிழகத்தில் எந்த இடத்தில் இருந்தும் புகார் தரலாம்; ‘டிஜிகாப்’ செயலியில் புதிய சேவை: சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்


  • kamadenu
  • Posted: 15 Jun, 2019 08:14 am
  • அ+ அ-

தமிழகத்தில் எந்த இடத்தில் இருந்தும் காவல் துறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கக்கூடிய ‘டிஜிகாப்’ செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

மாநில குற்ற ஆவணக் காப்பகம், சென்னை காவல் துறையுடன் இணைந்து ‘டிஜிகாப்’ (DIGICOP) என்ற மொபைல் செயலியை (App) கடந்த பிப்ரவரி 6-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், அந்த செயலியுடன், தமிழக காவல் துறையின் இணைய சேவையான சிசிடிஎன்எஸ் (குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலை தளம்) சேவைகள் புதிதாக இணைக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது.

தலைமையிட கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் முன்னிலையில், இந்த சேவையை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேசியதாவது:டிஜிகாப் செயலியை இதுவரை 72,155 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில் 33,839 பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். 8,311 செல்போன்கள் காணாமல் போனது குறித்து டிஜிகாப் செயலி மூலம் நேரடியாக புகார் அளிக்கப்பட்டு, அவற்றில் 1,227 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.

சிசிடிஎன்எஸ் சேவையும் தற்போது இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் எந்த இடத்தில் இருந்தும் இனி டிஜிகாப் செயலி மூலம் புகார் அளிக்கலாம். புகாரின் நிலவரம், அதற்கு வழங்கப்பட்ட சான்றான சிஎஸ்ஆர் நிலவரம் உள்ளிட்ட விவரங்களையும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் சென்னை காவல் துறை முன்னோடியாக உள்ளது. போக்குவரத்து காவல் துறை சார்பில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிசிடிபி (சிட்டிசன் சர்வீசஸ்) செயலி மூலம், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 102 போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் தவறு செய்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையர்கள் மகேஷ்குமார் அகர்வால் (தெற்கு), ஆர்.தினகரன் (வடக்கு), ஏ.அருண் (போக்குவரத்து), நாஸ்காம் ஜிசிசி அமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

‘டிஜிகாப்’ செயலி

செல்போன் காணாமல் போனது குறித்து புகார் அளிக்கவும், போலீஸார் மீட்ட செல்போன்கள், பைக்குகளில் தாங்கள் தொலைத்தவை இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளவும் ‘டிஜிகாப்’ செல்போன் செயலி இதுவரை பயன்பட்டு வந்தது. இனி காவல் துறையில் அளிக்கும் அனைத்துவிதமான புகார்களையும் இதன்மூலம் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close