[X] Close

காஸ், பெட்ரோல் ஏஜென்சி வழங்குவதாக மோசடியில் ஈடுபடும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்: எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 15 Jun, 2019 08:02 am
  • அ+ அ-

காஸ் ஏஜென்சி, பெட்ரோல் பங்க் நடத்த உரிமம் வழங்குவதாகக் கூறி இணையதளம் மற்றும் இ-மெயில் மூலம் பணமோசடியில் ஈடுபடும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:இந்தியன் ஆயில் நிறுவனம்,இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பெயரில் போலி இணையதளங்களை உருவாக்கி, அதன் மூலம் காஸ் ஏஜென்சி மற்றும் பெட்ரோல் பங்க் நடத்த உரிமம் வழங்குவதாகக் கூறி சில போலி நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக எண்ணெய் நிறுவனங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன.

குறிப்பாக, இந்த நபர்கள் பாமரமக்களைக் குறி வைத்து, அவர்களுக்குப் போலியான இ-மெயில்கள் அனுப்பியும், www.lpgvitarakchayan.in, www.petrolpumpdealerchayan.in என்ற பெயரில் உள்ள அசல் இணையதளங்களைப் போன்று போலியான இணையதளங்களை உருவாக்கியும் அதன் மூலம் ஏஜென்சி உரிமம் வழங்குவதாகக் கூறி மிகப் பெரிய அளவில் பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எண்ணெய் நிறுவனங்களைப் பொறுத்தவரை இதுபோன்று ஏஜென்சிகளுக்கான உரிமம் வழங்குவதென்றால், அதுகுறித்து முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் செய்வதோடு, எண்ணெய்நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களான www.iocl.com, www.bharatpetroleum.com, www.hindustanpetroleum.com ஆகியவற்றில் முறையாக அறிவிப்பு வெளியிடப்படும்.

எனவே இதுபோன்ற இணையதளங்கள் மற்றும் இ-மெயில் தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். அவ்வாறு ஏதேனும் சந்தேகம் வந்தால் அருகில் உள்ள எண்ணெய் நிறுவன அலுவலகத்தில் சென்று விசாரித்து உண்மைத் தன்மை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். போலி என அறியும்பட்சத்தில் உடனடியாக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க வேண்டும்.

மேலும், காஸ் ஏஜென்சி மற்றும் பெட்ரோல் பங்க் டீலர்களைநியமிப்பது தொடர்பாக அவர்களைத் தேர்வு செய்வதற்காக எண்ணெய் நிறுவனங்கள் எந்தவொரு நபர்களையும், ஏஜென்சிகளையும் நியமிக்கவில்லை. அத்துடன், இந்த போலி நபர்கள் மற்றும் ஏஜென்சிகளை நம்பி பணம் கொடுத்து ஏமாந்தால், அதற்கு எண்ணெய் நிறுவனங்கள் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close