[X] Close

தி.நகரில் விலை உயர்ந்த வைரக்கற்களை திருடி தப்பித்து ஓட்டம்: தானாகவே போலீஸாரிடம் சிக்கிய காமெடி


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 19:47 pm
  • அ+ அ-

வைரக்கற்கள் வியாபாரம் செய்யும் இடைத்தரகரிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரகற்களை(Blue Suffair) திருடிச் சென்ற நபர் தனது முட்டாள்தனத்தால் எளிதாக போலீஸரிடம் சிக்கினார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அதிர்ஷ்டக் கற்கள் எனப்படும் நவரத்தின வைரகற்களை வாங்கி விற்பனை செய்வதில் இடைத்தரகராக செயல்பட்டு வருகிறார். சென்னையில் அவருக்கு வியாபார தொடர்புகள் உண்டு. பிரபலமான நகைக்கடைகளில் வியாபாரம் செய்வது உண்டு.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் சமீபத்தில் செல்வத்தை தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் செல்வத்திடம், தனக்கு தெரிந்த சில அரசியல் பிரமுகர்களுக்கு அதிர்ஷ்ட கற்கள் தேவைப்படுகிறது வாங்கித் தரமுடியுமா? எனக்கேட்டுள்ளார்.

தாராளமாக வாங்கித்தருகிறேன் என பாஸ்கர் கூறி என்று எங்கே வருகிறார்கள் எனக்கேட்டுள்ளார். அவர்கள் நேரடியாக சென்னைக்கு வருகிறார்கள், சென்னையில் உள்ள சொகுசு விடுதி ஒன்றின் பெயரைச் சொல்லி அங்கு சந்திக்கலாம் என பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நேற்று மாலை செல்வம் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள புளூ சபையர் எனப்படும் வைரக்கற்களுடன் சென்னை தியாகராய நகர் மகாலட்சுமி தெருவில் உள்ள சொகுசு விடுதிக்குச் சென்றுள்ளார். ஏற்கெனவே சொன்னப்படி பாஸ்கரும் உடன் சிலரும் அங்கு வந்துள்ளனர்.

புளூ சபையர் எனப்படும் வைர கற்கள் வாங்குவதற்கான பேரம்பேசியுள்ளனர். பேரம் முடிவடைந்த நிலையில் செல்வம் கழிவறைக்கு சென்றுள்ளார். அவர் கழிவறைக்கு சென்ற நேரத்தில் பாஸ்கரும் அவருடன் இருந்தவர்களும் வைரக்கற்களை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளனர். அந்த நேரம் அதை பார்த்துவிட்ட பாஸ்கர் திருடன் பிடியுங்கள் என கூச்சல் போட்டுள்ளார்.

உடனடியாக போலீஸாருக்கும் செல்போனில் புகார் அளித்துள்ளார். அதற்குள் பாஸ்கரும் உடன் வந்தவர்களும் ஓடிவிட்டனர். போலீஸார் சம்ப்பவம் நடந்த சொகுசு விடுதிக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். தப்பி ஓடியவர்களை தேடியுள்ளனர், பிடிப்பதற்காக முக்கிய இடங்களில் தேடுதலும் அதிகப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வைரக்கற்களுடன் தப்பி ஓடிய பாஸ்கர் தானாக வந்து போலீஸ் வலையில் வீழ்ந்தார். பழைய திரைப்படங்களில் வரும் காட்சிபோல் எங்கேயோ யாரோ சம்பந்தமில்லாத போலீஸார் ரோந்து செல்ல, இவர் அவர்களைப்பார்த்து தப்பி ஓட பின்னர் சிக்கிக்கொண்டார்.

வைரத்தை திருடியவர்களை வலைவீசி போலீஸார் தேடிக்கொண்டிருக்க கூட்டாளிகள் நாலாப்பக்கம் பிரிந்த நிலையில் வைரக்கற்களுடன் பாஸ்கர் மட்டும் தி.நகர் பேருந்து நிலையம் வந்துள்ளார். பயணிகள் கும்பலில் பயணியாய் அப்பாவியாய் அமர்ந்துக்கொண்டார்.

இந்நிலையில் தி.நகர் பேருந்து நிலையம் அருகே வழக்கமாக ரோந்துக்காக வந்து நிற்கும் ஜிப்சி பேட்ரால் வாகனத்தில் டூட்டி எடுத்த ஏட்டையாவும், ஜீப் ஓட்டுனரும் சாவகாசமாக உருட்டிக்கொண்டு வழக்கமாக நிற்கும் இடத்திற்கு வந்து நிறுத்தியுள்ளனர்.

டீ வடை சாப்பிடலாம் என ஜீப்பை விட்டு கம்பீரமாக இறங்கியுள்ளனர். இவர்கள் வந்து நிற்கும் இடத்துக்கு பக்கத்திலா பாஸ்கர் அமர்ந்திருக்க வேண்டும். கடைசியில் போலீஸார் நம்மை சாமர்த்தியமாக கண்டுபிடித்து விட்டார்களே என திருடிய வைர நகைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு தடுமாற்றத்துடன் எழுந்துள்ளார்.

வேக வேகமாக டீக்கடை நோக்கி போலீஸார் இருவரும் முன்னேற, தம்மை பிடிக்க எவ்வளவு வேகமாக வருகிறார்கள் என நினைத்த பாஸ்கர், ‘குதிச்சுடுடா கைப்புள்ள’ என்று வடிவேல் சொல்வதுபோல் தப்பிச்சுடுடா பாஸ்கர் என வைரத்தை இறுக பிடித்துக்கொண்டு கும்பலிலிருந்து எழுந்து ஓடியுள்ளார்.

திடீரென ஒருவன் தங்களைப் பார்த்துவிட்டு கும்பலிலிருந்து பாக்கெட்டை பிடித்துக்கொண்டு ஓடுவதைப்பார்த்த போலீஸாருக்கு யாரு இது, டீ சாப்பிட போகும் நம்மைப்பார்த்து ஓடுகிறானே ஏதாவது வில்லங்கமா இருக்கும் விரட்டி பிடித்து வைப்போம் என துரத்த பாஸ்கர் அவர்களிடம் சிக்கிக்கொண்டார்.

ஐயா என்னை விட்றுங்க வைரத்த கொடுத்துடுறேன் என அவர் சொல்ல, ஆஹா வைரம் திருடிய திருடனா நீ என பாஸ்கரை கொத்தாக அள்ள , அப்ப நீங்க என்னை பிடிக்க வரலையா? நானாதான் வாயைவிட்டு மாட்டிகிட்டேனா என பாஸ்கர் விழிக்க, போலீஸார் அவரை ஸ்டேஷனுக்கு தள்ளிக்கொண்டு வந்தனர்.

பாஸ்கரிடமிருந்து திருடிய வைரங்கள் கைப்பற்றப்பட்டன. ஜீப்பை விட்டு இறங்கி டீ சாப்பிட போன இடத்தில் இப்படி ஒரு திருப்பமா? என பாஸ்கரை பிடித்த போலீஸார் சந்தோஷப்பட்டனர்.

தற்போது பாஸ்கரின் கூட்டாளிகளை தேடும் பணியில் போலீஸார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். திருடிய ஒன்றரை மணி நேரத்தில் தனது முட்டாள்தனத்தால் சிக்கிய பாஸ்கர் கைது செய்யப்பட்டார்.  

அவரை கைது செய்த காவல்துறையினர், தப்பியோடிய நபர்களை பற்றி அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு நவரத்தின கற்களுடன் தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close