[X] Close

பொக்கிஷமாக திகழும் அச்சு இயந்திரங்கள்:  ஆய்வு மாணவர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் பார்வை


traditional-print-machines

95 ஆண்டுகள் பழமையான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ‘டிரடில்’ அச்சு இயந்திரம் | படங்கள்: மு.லெட்சுமி அருண்

  • kamadenu
  • Posted: 15 Jun, 2018 14:26 pm
  • அ+ அ-

திருநெல்வேலி டவுனிலுள்ள பழமையான தி ஹிலால் பிரஸ் என்ற அச்சகத்தில் 93 ஆண்டுகள் பழமையான அச்சு இயந்திரங்கள், உபகரணங்கள் அரிய பொக்கிஷங்களாக பாதுகாக்கப் படுகின்றன.

இந்த அச்சகம் 1925-ம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது. தொடக்கத்தில் இந்த அச்சகத்தை மேற்கு ரதவீதியில் நடத்திவந்த முஹம்மது அப்துல் லத்தீப், 1940-ம் ஆண்டில் வடக்கு ரதவீதியில் தற்போதுள்ள இடத்தில் மாற்றம் செய்திருந்தார்.

அச்சகத்தின் முகப்புதோற்றம் நமது பாரம்படிய கட்டிடக் கலையின் நுணுக்கத்தை வெளிக்காட்டுகிறது. உள்ளே இரண்டு மாடி கட்டிடத்தில் செயல்படும் இந்த அச்சகத்தை தற்போது 3-வது தலைமுறையாக ஏ. ஹமீத் சுபைர் நடத்தி வருகிறார்.

பழமையை பறைசாற்றுகிறது

அச்சகத்தின் உள்ளே நுழையும்போதே புராதன சின்னத்துக்குள் செல்வதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. கருங்கற்களால் படிக்கட்டுகள், தேக்கு மரத்தால் கதவு ஜன்னல்கள், உள்ளே பழமையான அச்சுக் கூடம், அச்சு இயந்திரங்கள், பழைய புத்தகங்கள் என்று இந்த அச்சகம் பழமையை பறைசாற்றுகிறது.

நவீன காலத்துக்கேற்ப இந்த அச்சகமும் 85 சதவீதம் கணினி மயமாக்கப் பட்டிருக்கிறது. இதனால் இங்குள்ள பழமையான அச்சு இயந்திரங்கள் பயன்பாடின்றி காட்சிப் பொருளாகி விட்டன.

நூலகம்

இந்த அச்சகத்தில் முதன்முதலில் 1925-ல் அச்சிடப்பட்ட, மு.ந.ஹாஜி முஹம்மது சாஹிப் எழுதிய திருநபி சரித்திரம் என்ற அரிய நூல் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் அடங்கிய நூலகமும் இடம்பெற்றுளது. 

திருநபி சரித்திரம் தற்போது 7-வது பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் இந்த அச்சகத்தில் அச்சிடப்படும் புத்தகங்கள், படிவங்கள், ஃபைல்கள் உள்ளிட்டவற்றின் அசல் படிவங்களை பிரத்யேக உறைக்குள் வைத்து, அவற்றுக்கு ஆங்கில எழுத்தில் பெயரிட்டு பாதுகாக்கும் நடைமுறையும் இங்குள்ளது.

ஏ முதல் இசட் வரையிலான எழுத்துகளை ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு எழுத்து என்று உறையின்மேல் அச்சிட்டு தகவல்களை பாதுகாத்து வருகிறார்கள். ஆனால், அவ்வாறு பாதுகாத்தவற்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கரையான்கள் அரித்துவிட்டதால் பல்வேறு அரிய பொக்கிஷங்கள் பாழாகி விட்டன.

1925-ம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து வாங்கிவரப்பட்ட பழமையான அச்சு இயந்திரங்கள் இந்த அச்சகத்தில் இப்போதும் இருக்கின்றன.  இவற்றை ஆய்வு மாணவர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பார்த்துவிட்டு செல்கிறார்கள். 

இயக்க ஆட்களில்லை

இந்த இயந்திரங்களை நன்கு இயக்கத் தெரிந்த அச்சக ஊழியர் டவுனை சேர்ந்த ஷேக் மன்சூர் (58) கூறும்போது, ‘‘இதுபோன்று முழுக்க முழுக்க மனித உழைப்பால் செயல்படும் இந்த அச்சு இயந்திரங்களை இயக்க வரும் தலைமுறையில் ஆள்கள் இல்லை. இப்போது நவீனத்துவம் புகுந்துவிட்டது என்றார்.

பழமையான அச்சுகள், அச்சு எழுத்து வடிவங்கள், சிறிய மற்றும் பெரிய அளவிலான டிரடில் எனப்படும் அச்சு இயந்திரங்கள், நோட்டு புத்தகங்களில் கோடு வரைவதற்கான இயந்திரம் உள்ளிட்ட பழமையான உபகரணங்களால் இந்த அச்சகம் நிறைந்திருக்கிறது. 

 - ஹமீத் சுபைர்

அச்சகத்தின் உரிமையாளர் ஏ.ஹமீத் சுபைர் கூறும்போது, ‘‘தாத்தா காலத்திலிருந்து பாரம்பரியமிக்க கட்டிடத்தில், பழைய அச்சு இயந்திரங்களை கொண்டு இந்த அச்சகம் செயல்பட்டு வருகிறது. இதன் பழமையை மாற்றாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

-  . அருள்தாசன்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close