[X] Close

தென் மாவட்டங்களை ஏமாற்றும் தென்மேற்கு பருவமழை: அணைகள் நிரம்பாததால் விவசாயிகள் வருத்தம்


monsoon-failure-in-south-tamilnadu

  • kamadenu
  • Posted: 15 Jun, 2018 14:14 pm
  • அ+ அ-

தென் மாவட்டங்களில் தற்போது பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவமழை தாமதமாகி அணைகள் நிரம்பாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பொதுவாக, கடந்த காலத்தில் தென்மேற்குப் பருவமழை அரபிக் கடலோர மாநிலங்களில் மே 15-ம் தேதி முதல் 23-ம் தேதிக்குள் தொடங்கும். இதனால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய 11 மாவட்டங்களில் மழைபொழிவு ஏற்படும். சராசரியாக, தமிழகத்தில் ஆண்டுக்கு 350 மி.மீ. முதல் 460 மி.மீ. மழை வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். கன்னியாகுமரியில் அதிகபட்ச மழை பொழிவு இருக்கும். 

ஆனால், இந்த ஆண்டு மிகவும் தாமதமாக, தற்போதுதான் கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசாக சாரல் மழை பெய்து வருகிறது. 

இதற்கிடையே, இயல்புக்கு மாறாக கடந்த ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கிய காற்றின் போக்கின் அடிப்படையில் வெப்பச் சலன மழை, தென்மேற்கு பருவமழைக் காலங்களில் பெய்தது. இந்த மழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. சித்திரைப் பட்டம் விவசாயத்துக்கு மட்டும் ஓரளவு கை கொடுத்தது. அடுத்து ஆடிப்பட்டம் விவசாயம் தொடங்கும். இதற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அணைகள் நிரம்ப வேண்டும். ஆனால், தென்மேற்குப் பருவ மழை இன்னும் பெரிய அளவில் பெய்யாததால் பெரியாறு, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வேளாண் பொறியாளர் (திண்டுக்கல்) பிரிட்டோராஜ் கூறியதாவது: வெப்பச் சலன மழை முடிந்து வெயில் அதிகரித்த பிறகே இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை பெய்யத் தொடங்கி உள்ளது. அதுவும், கேரளாவில் மட்டும் லேசாக பெய்து வருகிறது. பொதுவாக கேரளாவில் இந்த காலகட்டத்தில் மழை அதிகமாக பெய்யும். 

இலங்கையின் தெற்குப் பகுதியில் பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவ மழையும் இன்னும் பெய்யத் தொடங்கவில்லை. அதற்கு நேர்மாறாக, தற்போது பலத்த காற்று வீசி வருகிறது. பெரும்பாலான அணைகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியே அமைந்துள்ளன. இந்த அணைகளில் நீர்மட்டம் உயர தென்மேற்குப் பருவமழை பெய்ய வேண்டும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் எதிர்பார்த்த அளவு பெய்யத் தொடங்கவில்லை. 

ஆனால், இந்த மழை பெய்ய வேண்டிய காலத்தில் வெப்பச் சலன மழை, ஓரளவு பெய்து அதனை ஈடுகட்டி விட்டது. சித்திரைப் பட்டத்தில் தென்மேற்குப் பருவமழை முறையாக பெய்ய வேண்டிய நாட்களில் வெப்பச் சலன மழை பெய்துள்ளது. 

அடுத்து ஆடிப் பட்டத்துக்கு தயாராகும் வகையில், நிலத் தயாரிப்பு மற்றும் மண்ணில் ஈரம் காப்பது, அதிகரிப்பது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் இந்த வெப்பச் சலன மழை உதவி உள்ளது. அதுபோல, சித்திரைப் பட்டத்தில் பயிரிடப்பட்ட காய்கறிகள் அதிக விளைச்சலுக்கும் இந்த மழை பேருதவியாக அமைந்துள்ளது. அதனால், இந்த ஆண்டு தோட்டக் கலைப்பயிர் விவசாயிகளை பருவமழை ஏமாற்றாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close