[X] Close

ஹெல்மெட் மட்டும் போதுமா?- அனைத்து விதிகளையும் அமல்படுத்த வலியுறுத்தல்!


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 09:02 am
  • அ+ அ-

இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாவிட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிடுவது வரவேற்கத்தக்கதே. அதேசமயம், ஹெல்மெட் கட்டாயம் மட்டும் போதுமா? சாலை போக்குவரத்து விதிகளை முழுமையாகவும், முறையாகவும் கடைப்பிடிக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.

“தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டு, மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அபராதத்தை அதிகரிப்பது, வாகனத்தைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகள்கூட மேற்கொள்ளலாம் என அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதேபோல, அனைத்து விதிகளையும் முறையாக அமல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அரசும் அதைக் கடைப்பிடித்து, பொதுமக்கள் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்” என்கிறார் கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பு தலைவர் சி.எம்.ஜெயராமன். அவரிடம் பேசினோம்.

“ஹெல்மெட் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் வரவேற்கத்தக்கவை. அதேசமயம், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்தான், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது சரியல்ல. சாலை, போக்குவரத்து விதிகளை முறையாகவும், முழுமையாகவும் அமல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

அபராதம் கட்டிவிட்டு தொடர்ந்து ஓட்டலாமா?

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவரிடம் அபராதம் வசூலித்து, அதற்கான ரசீதும் கொடுத்துவிட்டு, அங்கிருந்து அனுப்பிவிடுகின்றனர். தொடர்ந்து அவர் வாகனத்தை ஓட்டும்போது, விபத்து நேரிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? மேலும், ஹெல்மெட் அணியாவிட்டால் அவரும், உடன் செல்பவரும்தான் பாதிக்கப்படுவார்கள். மது அருந்தி வாகனம் ஓட்டுபவரால் எத்தனை பேருக்கு  பாதிப்பு ஏற்படும்?

எனவே,  அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு, மேற்கொண்டு ஆட்டோ அல்லது டாக்சியில் செல்ல மட்டுமே அனுமதிக்க வேண்டும். அல்லது போதை தெளியும்வரை அங்கேயே இருக்கச் செய்ய வேண்டும். அபராதம் கட்டிய ரசீதின் நகலை அவரது வீட்டுக்கு தபாலில் அனுப்பிவைக்க வேண்டும். அப்போதுதான், அவரது செயல் வீட்டுக்குத் தெரியும். அவரும் நிலையை உணர்வார். அதேபோல, அபராதத் தொகைக்குப் பதிலாக ஒரு ஹெல்மெட்டைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும். தொடர்ந்து ஹெல்மெட் கிடைத்துக்கொண்டே இருந்தால், அதற்குப் பயந்தாவது அவர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவார்.

பள்ளிக் குழந்தைகளா, புளிமூட்டையா?

பல பள்ளி ஆட்டோக்களில் 10-க்கும் மேற்பட்ட  குழந்தைகளை ஏற்றிச் செல்கின்றனர். பெற்றோரும் இதை ஊக்குவிக்கின்றனர். அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றிச் செல்வதை, எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கக்கூடாது. அதேபோல, மீட்டர் போடாமல் ஆட்டோக்களை இயக்குபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

லாரி, டெம்போக்களில் இரும்புக் கம்பிகள் வெளியில் நீட்டிக்கொண்டு இருக்குமாறு வாகனம் ஓட்டுவதால், மிகப் பெரிய விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. போக்குவரத்துக் காவலர்களும் இதைக் கண்டுகொள்வதில்லை.

போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், காலை, மாலை நேரங்களில் புளிமூட்டையைப்போல அடைத்துக்கொண்டு பேருந்துகளில் பயணிக்கிறார்கள். குறிப்பாக, மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்கின்றனர். காலை, மாலை  நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டாமா?

செயல்படாத சிக்னல்கள் சீரமைக்கப்படுமா?

நிறைய போக்குவரத்து சிக்னல்கள் பழுதடைந்து, செயல்படாமல் உள்ளன. அபராதமாக பல நூறு கோடி வசூலிக்கும் நிலையில், போக்குவரத்து சிக்னல்களை சரி செய்வது அவ்வளவு கடினமான காரியமா என்ன?  கார்களில் `சன் ஃபிலிம்’ ஒட்டக்கூடாது என்ற உத்தரவை 2, 3 ஆண்டுகள் மட்டும் முழுமையாக அமல்படுத்தினார்கள். பின்னர், அதைக் கண்டுகொள்வதில்லை. இதனால், பல விபரீதங்கள் நேரிடுவதை அண்மையில் காணமுடிந்தது. கனரக வாகனங்களில் ஒலிக்கும் காற்று ஒலிப்பான்களால் காற்று மாசு ஏற்படுவது மட்டுமின்றி, வழியில் செல்வோரின் செவித்திறன் பாதிக்கப்படுகிறது. மன உளைச்சலும், மன அழுத்தமும்கூட உண்டாகிறது. காற்று ஒலிப்பான்களை முற்றிலும் அகற்ற முடியாதா?

மதுக்கடை வருமானம்தான் முக்கியமா?

நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவில்தான் மதுக்கடைகள் இருக்க வேண்டும். ஆனால், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, `ஜிக்ஜாக்’ வேலை செய்து, சாலையோரத்திலேயே கடை அமைத்துவிடுகிறார்கள். பள்ளி, கோயில் அருகில் எல்லாம் மதுக்கடைகள் இருக்கின்றன. இப்படி ஒரு வருமானம் அரசுக்கு அவசியமா?

இந்திய சாலை காங்கிரஸ் விதிகளின்படி, வேகத்தடைகள் அமைக்கப்படுவதேயில்லை. அங்கீகரிக்கப் படாத இடங்களிலும், செல்வாக்கு மிக்கவர்கள் இடத்திலும் வேகத்தடைகள் உள்ளன. எங்கு வேகத்தடை அமைக்க வேண்டுமோ, அங்கு கிடையாது. வேகத்தடை இருப்பது குறித்த அறிவிப்புப் பலகையும் வைக்கப்படுவதில்லை. இவற்றை யார் சரி செய்வது? குண்டும், குழியுமான சாலைகளால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் நேரிடுவது அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாதா? பல்லாங்குழிபோல  காட்சியளிக்கும் சாலைகளைச் சரி செய்ய வேண்டுமென உத்தரவிட மாட்டார்களா?

திட்டமிடும்போது மேம்பாலங்கள் சிறப்பாகவே உள்ளன. ஆனால், நடைமுறைப்படுத்தும்போது, பல முறை மாற்றியமைத்து, சிலரின் தேவைக்கேற்ப பாலங்களைக் கட்டுவதால், போக்குவரத்து நெரிசலும் குறைவதில்லை. மக்களின் வரிப் பணமும் வீணாகிவிடுகிறது. தேவையில்லாத இடங்களில் எல்லாம் பாலம் கட்டுபவர்கள், தேவையான இடங்களில் சாலைகள் அமைத்தல், சுரங்கப்பாதைகள் அமைத்தல், புறவழிச் சாலைகள், வட்டச் சாலைகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளாதது ஏன்?

நேரடி வசூல் தேவையா?

சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத் தொகையை டெபிட் கார்டு அல்லது நீதிமன்றம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டுமென  உத்தரவிடப்படுமா? இதைக் கடைப்பிடித்தால்தான் அபராதத் தொகை முழுமையாக அரசை சென்றடையும். முறைகேடுகளையும், லஞ்சப் புகார்களையும்  தவிர்க்கலாம்.தடை செய்யப்பட்ட,  ஒருவழிப் பாதைகளில் வாகனங்கள் அத்துமீறியும், விதிகளை மீறியும் செல்வதைக் கட்டுப்படுத்தவே முடியாதா? அவ்வாறு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

ஆம்னி பேருந்துகள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட அரசுப் பேருந்துகள், முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளதா? ஏ.சி. இயந்திரங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா? விபத்து நேரிடும்போது மக்கள் கூண்டோடு கருகி விடுகின்றனர். இவற்றையெல்லாம் கண்காணிப்பார்களா? சாலையோரம் வைக்கப்பட்டுள்ள, கண்ணைக் கவரும் மின் விளக்குகளுடன் கூடிய விளம்பரப் பலகைகளால் பல விபத்துகள் நேரிடுகின்றன. இவற்றை முறைப்படுத்த முடியாதா?

பள்ளி செல்லும் குழந்தைகள், வாகனங்கள் ஓட்டுவதை பெருமையாகக் கருதுகின்றனர் அவர்களது பெற்றோர். சிறுவர்களால் ஏற்படும் விபத்துகளுக்கு யார் பொறுப்பேற்பது? பள்ளி நிர்வாகம் வாகனத்தைப் பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். மீண்டும் இதுபோல வாகனத்தை ஓட்டினால் ‘டிசி கொடுத்து அனுப்பிவிடுவோம்’ என எச்சரிக்க வேண்டும். அப்போதுதான் சிறுவர், சிறுமிகள் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க முடியும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

வாகன நிறுத்துமிடங்கள், பாதசாரிகள் நடந்து செல்லுமிடங்களெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதே? இது யார் கண்ணுக்கும் புலப்படாதா? ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்களை நிறுத்த மல்டி லெவல் பார்க்கிங் வசதி போன்றவற்றை செய்துதரக் கூடாதா?

இதுபோல எண்ணற்ற கேள்விகளும், கோரிக்கைகளும் உண்டு. இதையெல்லாம் நீதிமன்றம் உத்தரவிட்டுத்தான், அமல்படுத்த வேண்டுமென்பதில்லை. அரசும், அதிகாரிகளும் சாலை, போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடித்தாலே போதுமானது. ஹெல்மெட்டுக்காக மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வையும், சட்ட அமலாக்கத்தையும், அனைத்து விதிகளை அமல்படுத்தவும், எல்லா பிரச்சினைகளுக்காகவும் அமல்படுத்த வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close