[X] Close

தமிழகத்தில் 11 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்: 10 மாவட்டங்களில் வெப்ப அலை நீடிக்கும்


11-100-10

  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 07:56 am
  • அ+ அ-

தமிழகத்தில் நேற்று 11 நகரங்களில் வெயில் 100 டிகிரி அளவை விட அதிகமாக பதிவாகி இருந்தது. அடுத்த சில தினங்களுக்கு 10 மாவட்டங்களில் வெப்ப அலை நீடிக்க வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், சில நகரங்களில் வெப்பம் அதிகமாகவே உள்ளது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி அதிகபட்சமாக கடலூரில் 106 டிகிரி, மதுரை தெற்கு, திருத்தணி ஆகியஇடங்களில் தலா 105 டிகிரி, மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், சென்னை விமான நிலையம், வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, தூத்துக்குடியில் 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

அடுத்த சில தினங்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை நீடிக்கும்.

வெப்பச் சலனத்தால் மழை

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை அல்லது சூறைக் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close