[X] Close

நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்போம் என்று கூறவில்லை: எதிரணி குற்றச்சாட்டுக்கு பாக்யராஜ் மறுப்பு


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 07:52 am
  • அ+ அ-

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ம் தேதி சென்னைஎம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடக்க உள்ளது. இதில், பாண்டவர் அணி சார்பில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரும், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் இயக்குநர் பாக்யராஜ், ஐசரி கே.கணேஷ் உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேமுதிக தலைவரும், நடிகர் சங்க முன்னாள் தலைவருமான விஜயகாந்தை சுவாமி சங்கரதாஸ் அணியினர் நேற்று சந்தித்து ஆதரவு திரட்டினர். பின்னர் செய்தியாளர்களிடம் பாக்யராஜ், ஐசரி கே.கணேஷ் இருவரும் கூறியதாவது:

விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டோம். எங்களுக்கு ஆதரவாக இருப்பதாக அவரும் நம்பிக்கை தெரிவித்தார். ‘நீங்கள்தான் வெற்றிபெறுவீர்கள்’ என்று கூறி எங்கள்கையைப் பிடித்து வாழ்த்தினார். அடுத்தடுத்து ரஜினி, கமல், விஜய் ஆகியோரையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.

உண்மையில் பாண்டவர் அணி எதையும் சரியாக செய்யவில்லை. நடிகர் சங்கக் கட்டிடத்தை குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் கட்டி முடிக்காததால்தான் எங்கள் அணி உருவானது. கட்டிட வேலைகள் ஒன்றரை ஆண்டாக பாதியில் நிற்கின்றன. அந்த கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்பதுதான் எங்கள் நோக்கம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

‘நாடகக் கலைஞர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறியதாக உங்கள் மீது பாண்டவர் அணி புகார் அளித்துள்ளதே’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பாக்யராஜ் கூறியதாவது:

நலிந்த நாடகக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று சொன்னோம். அதேபோல, நாடக நடிகர்கள் பலரும் பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள். ஓட்டு கேட்டு செல்லும்போது தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு ஏதாவது செய்வோம் என்று சொன்னேன். அவர்களை கைதூக்கி விடுவதுதான் எங்கள் நோக்கம். அதை எதிர் அணியினர் திரித்து கூறியுள்ளனர்’’ என்றார்.

நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு இருப்பதாக ராதாரவி கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, ‘‘ராதாரவி போல பலரும் எங்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். நாளை முதல் அவர்களது ஆதரவையும் கேட்டு செல்ல உள்ளோம். இத்தேர்தலில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை’’ என்றனர்.

பாண்டவர் அணி தேர்தல் அறிக்கை

இதற்கிடையில், தேர்தல் அறிக்கையை பாண்டவர் அணி வெளியிட்டுள்ளது.

‘‘திரைப்படம் வெளியாகும்போது, தேவையின்றி அப்படத்தின் நடிகர், நடிகைகளை பொருளாதார நிர்பந்தத்தில் சிக்கவைப்பதை தடுக்க சட்டரீதியான பாதுகாப்பு தரப்படும். இதற்கான புது சட்ட திட்டங்கள் வரையறுக்கப்படும். சங்க கட்டிடத்துக்காக முழு மூச்சாக செயல்பட்டதால் தற்காலிகமாக தடைபட்டிருந்த நாடக விழாக்கள், போட்டிகள், விருது நிகழ்ச்சிகள் ஆகியவை புதிய நடிகர் சங்க கட்டிடத்தில் நடத்தப்படும். தகுதியான பழம்பெரும் கலைஞர்களுக்கான பொற்கிழியின் பணமதிப்பு உயர்த்தப்படும். ஆய்வாளர் குழு அமைத்துசங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களின் உண்மையான வடிவம் மீண்டும் கொண்டுவரப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close