[X] Close

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் 3 ஆட்சியர்கள், தனியார் நிறுவனங்களுக்கு பசுமை விருதுகள்: முதல்வர் பழனிசாமி வழங்கினார்


3

  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 07:31 am
  • அ+ அ-

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பசுமை விருதுகளை 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 2014-15-ம் ஆண்டு சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கையில், திருவள்ளூரில் இயங்கும்மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வகத்துக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 473 சதுர மீட்டர் பரப்பில் ரூ.2 கோடியே 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களை ஊக்குவிக்கவும், மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் தொழில், கல்வி நிறுவனங்களை பாராட்டும் வகையிலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டுதோறும் பசுமை விருதுகள் வழங்கி வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசன்ட் திவ்யா, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் (தற்போது ராமநாதபுரம்), நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சந்தீப்நந்தூரி (தற்போது தூத்துக்குடி) ஆகியோருக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார். மேலும், அதானிமரைன் இன்ஃப்ராஸ்டிரக்சர் டெவலப்பர், ஜெயவிஷ்ணு டெக்ஸ்பிராஸசர்ஸ், தி ராம்கோ சிமென்ட்ஸ் ஆகிய தொழில் நிறுவனங்களுக்கும், ஸ்ரீ வெங்க டேஸ்வரா பொறியியல் கல்லூரி (காஞ்சிபுரம்), மெப்கோ ஸ்லங்க் பொறியியல் கல்லூரி (விருதுநகர்), ராம்கோ வித்யாலயா ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் பசுமை விருதுகளை முதல்வர் வழங்கினார்.

இதுதவிர, மக்கும் கழிவில் இருந்து உரம், மீத்தேன் வாயு தயாரித்தல், மக்காத கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு, மரம் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான பசுமை விருதுகளை தி சென்ட்ரல் பார்க் சவுத், சபரிடெரஸ் அபார்ட்மென்ட் உரிமையாளர்கள் சங்கம், சீபராஸ் பொலிவார்ட், ரமணீயம் ஈடன், டக்ஸ்ராஅசோசியேஷன் ஆகிய குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கும் முதல்வர் வழங்கினார்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை உத்தரவை சிறப்பாக செயல்படுத்த உறுதுணையாக இருந்ததற்காக மண்டல ஒருங்கிணைப்பாளர்களான உணவு பாதுகாப்பு ஆணையர் பெ.அமுதா, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோருக்கு சிறப்பு பசுமை விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கருப்பணன், பெஞ்சமின், கே.பாண்டியராஜன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், துறை செயலர் ஷம்பு கல்லோலிகர், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர், செயலர் டி.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close