[X] Close

அரவக்குறிச்சியில் ஸ்டாலின் நன்றி தெரிவிப்பு: உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆதரவு திரட்டினார்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 12:42 pm
  • அ+ அ-

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து நன்றி கூறினார். அத்துடன் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய திமுக செயலாளர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு கரூர் வந்தடைந்தார்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை அவர் அரவக்குறிச்சிக்கு உட்பட்ட 4 தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

முதலில் க.பரமத்திப் பகுதியில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பெண்கள், அரசு, தனியார் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும், அங்கு குடிநீர் விநியோகம் 10, 15 நாட்களுக்கு ஒருமுறையே நடைபெறுவதாகவும் அதனை முறைப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அங்கிருந்து பள்ளப்பட்டி ஊராட்சிப் பகுதிக்கு சென்றார். அங்கு திமுக சார்பில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 14 பேருக்கு திருமண உதவித் திட்டத்தின் கீழ் தலா ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

பள்ளப்பட்டி ஒன்றிய திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த இலவச தையல் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். அங்கும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்பகுதி மக்கள் நங்காஞ்சி அணையை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பவித்ரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயந்தி நகர், தவிட்டுப்பாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளுக்கும் சென்றார். எல்லா இடங்களிலும் மக்கள் தண்ணீர் பிரச்சினையையே பிரதானமாக முன்வைத்தனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மற்றும் திமுகவும் ஆதரவு கொடுத்தது போல் உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

ஸ்டாலினுடன் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி, மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னீவ் ராஜேந்திரன் ஆகியோர் இருந்தனர்.

ஸ்டாலின் நன்றி தெரிவித்த பகுதிகள் அனைத்துமே அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினுடன் இளைஞர்கள், சிறுவர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close