[X] Close

நேர்மையும் கடின உழைப்புமே வெற்றியை தரும்!


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 09:23 am
  • அ+ அ-

-ஆர்.கிருஷ்ணகுமார்

இரும்பு வியாபாரம், சினிமா துறை, ஆட்டோமொபைல்ஸ், தங்கும் விடுதி என கோவை சிஆர்எஸ்.மன்னாடியார் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியனுக்கு(65)  பல முகங்கள் உண்டு. “நேர்மையும், கடின உழைப்புமே வெற்றியைத் தேடித் தரும். பல்வேறு வணிகத்தில் சாதித்திருந்தாலும், ஆன்மிகப்  பணியும், பிறருக்கு உதவுவதுமே நிறைவைத் தருகின்றன” என்கிறார் பாலு என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் பாலசுப்பிரமணியன்.

கோவையில் உள்ள பல வர்த்தக சங்கங்களின் நிர்வாகி, சாய்பாபா கோயில் உள்ளிட்ட பல ஆன்மிகத் தலங்களின் பொறுப்பாளர், பல தொழில்களின் உரிமையாளரான இவரை கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அர்ச்சனா-தர்ஷனா திரையரங்கில் சந்தித்தோம்.

“பூர்வீகம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள புதுநகரம் கிராமம். பெற்றோர்  சி.ஆர்.சங்குன்னி மன்னாடியார்-சரஸ்வதி அம்மாள்.

எம்ஜிஆர் குடும்பம்...

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சொந்த ஊர், எங்கள் ஊருக்கு அருகில் உள்ள வடவனூர். இதனால் எங்கள் குடும்பத்துக்கும், எம்ஜிஆர் குடும்பத்துக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. பிற்காலத்தில், எனது திருமணத்தை ம.பொ.சி. தலைமையில்,  எம்.ஜி.சக்கரபாணிதான் நடத்தி வைத்தார். எங்கள் வீட்டில் நடைபெறும் விசேஷங்களில் எம்ஜிஆர் குடும்பத்தினர் பங்கேற்பது வழக்கம்.

எங்கள் குடும்பம் பாரம்பரியமாக விவசாயக் குடும்பம். எங்கள் தாத்தாவுக்கு 3 மகன்கள். எனது தந்தை சிறு வயது இருக்கும்போதே, தாத்தா இறந்துவிட்டார். சகோதரர்கள் 3 பேருமே ஆரம்பத்தில் விவசாயம் செய்தனர். விவசாயத்தில் பெரிய அளவுக்கு வேலை இல்லாததால் ஒருவர் மட்டும் கிராமத்தில் இருந்துகொண்டார். 1924-ல் வேலை தேடி அப்பாவும், சித்தப்பாவும் கோயம்புத்தூருக்கு வந்துவிட்டனர். கோவையில் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து,  இரும்பு பட்டறை ஆரம்பித்தார் அப்பா.

சூலூர் விமானநிலையத்துக்கு...

முதல் உலகப்போர் சமயத்தின்போது சூலூரில் விமானப்படைத் தளம் கட்டப்பட்டது. அப்போது, விமானப்படை தளத்துக்குத் தேவையான இரும்பு தளவாடங்களை என்.ஹெச். சாலையில் உள்ள எங்கள் பட்டறையில் தயாரித்து, விமானப்படை தளத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதையடுத்து, இரும்புப் பட்டறை நன்கு வளர்ந்தது. நான் பிறந்தது பாலக்காடு  புதுநகரம் கிராமத்தில். சகோதரர், சகோதரிகள் நாங்கள் 5 பேர். 1942-ல்சிஆர்எஸ் மன்னாடியார் பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை அப்பா தொடங்கினார்.

1951-ல் கோவை ஆர்.எஸ்.புரம் சிந்தாமணி பகுதிக்கு குடி வந்துவிட்டோம். பெரிய கடைவீதியில் உள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, பிஏஜி கலை, அறிவியல் கல்லூரியில் பி.காம். முடித்தேன். கல்லூரி முடித்த நேரத்தில் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இதனால், 1974-75-ல் கல்லூரி முடித்த உடனேயே இரும்பு பட்டறைக்கு வந்துவிட்டேன். தொடர்ந்து, பல இடங்களில் கிளைகளும், கிடங்குகளும் அமைத்தோம்.

இரட்டை திரையரங்கம்!

1981-ல் திரைத் துறை உச்சத்தில் இருந்தது. சினிமா மட்டுமே மக்களுக்கு முதன்மை பொழுதுபோக்காக இருந்தது. அப்போது, கோவையில் திரையரங்குகளும் அதிகம் இல்லை. எனவே, அர்ச்சனா-தர்ஷனா என்ற பெயரில் திரையரங்கை கட்டினோம். திறப்பு விழாவில் தமிழக சட்டமேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி.

தலைமையில், அமைச்சர்கள் நெடுஞ்செழியன், அரங்கநாயகம், குழந்தைவேலு, கே.ஏ.கிருஷ்ணசாமி, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜி.வி.பிலிம்ஸ் தயாரித்த அனைத்து படங்களையும் நாங்கள் திரையிட்டோம். சிவாஜி, ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களின் படங்கள் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றன.  திரையரங்கை சிறப்பாகப் பராமரித்ததாலும், நவீன வசதிகளை கொண்டுவந்ததாலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

தொடர்ந்து ஸ்ரீபாபா பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனத்தை தொடங்கினோம்.  ரோஜா, அஞ்சலி, நாயகன், சின்னகவுண்டர் என 200-க்கும் மேற்பட்ட படங்களை கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் விநியோகித்தோம். மேலும், சானா சினி அசோசியேட்ஸ் நிறுவனத்துடனும் இணைந்து, பல படங்களை விநியோகித்தோம். சாட்டிலைட் டிவிஷன் தொடங்கி, 200, 250-க்கும் மேற்பட்ட படங்களை டிவி சேனல்களுக்கு வழங்கினோம். திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களின் வெற்றி விழாக்களில் பல நடிகர்கள் பங்கேற்றனர். விதி, அபூர்வசகோதரர்கள், முதல் மரியாதை, நாயகன், அக்னி நட்சத்திரம், சின்னகவுண்டர் உள்ளிட்ட படங்கள் 175 நாட்கள் ஓடின.

நண்பரான சிவாஜி!

நடிகர் திலகம் சிவாஜியின் சம்பந்தி முத்துமாணிக்க கவுண்டர் எங்கள் குடும்ப நண்பர். அவர் மூலம் சிவாஜியின் குடும்பத்தினருடனும், நாங்கள் நெருக்கமாகப் பழகினோம். சிவாஜி கோவை வரும்போது பல சமயங்களில் நான் உடனிருப்பேன். இதேபோல, நடிகர் கமலுடனும் நட்பு ஏற்பட்டது.

2000-ம் ஆண்டுக்குப் பிறகு ஆட்டோமொபைல்ஸ் துறையில் ஈடுபட்டோம். மகேந்திரா கார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டோம். 2004-ல் ப்ரூக் பீல்ட்ஸ் சாலையில் மன்னாடியார் கார்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம். இதில், உபயோகப்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை சிறப்பாக நடைபெற்றது. இதேபோல, கோவை ஆர்.எஸ்.புரத்தில் `துவாரகா இன்: ப்ரீமியம் ஹோம் ஸ்டே’ என்ற தங்கும் விடுதியைக் கட்டினோம்.

இப்படி, பல தொழில்களில் ஈடுபட்டாலும், நேர்மையும், சத்தியம்-தர்மத்துக்கு கட்டுப்பட்டு வணிகம் செய்வதுமே தொழிலின் அடிப்படையாக இருந்தது. தற்போதும் ஒரு நாளைக்கு சுமார் 16 மணி நேரம் வேலை செய்கிறேன். கடும் உழைப்பு மட்டுமே வெற்றியைத் தரும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு” என்றார் பாலசுப்பிரமணியன்.

“தொழில் பிரமுகர் என்பதைக் காட்டிலும், ஆன்மிகவாதி என்றுதானே உங்களை அறிய முடிகிறது?” என்று கேட்டதற்கு, கொஞ்சம் விரிவாகவே பதில் கூறினார்.

ஒரு விபத்து ஏற்படுத்திய மாற்றம்!

“நான் கல்லூரியில் படிக்கும்போது ஆர்.எஸ்.புரம் சிந்தாமணியில் உள்ள வீட்டிலிருந்து மொபெட்டில் சென்று ஜே.எம்.பேக்கரி பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பேருந்தில் பிஎஸ்ஜி கல்லூரிக்குச் செல்வேன். ஒரு நாள் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தபோது, சக மாணவரும் உடனிருந்தார். பேருந்து வந்தபோது, அதில் ஏற முயன்ற என்னைத் தள்ளி விட்டுவிட்டு, அவர் ஏறிக் கொண்டார். பேருந்து படிக்கட்டில்தான் அவரால் நிற்க முடிந்தது. நான் அந்தப் பேருந்தில் ஏறவில்லை. அந்தப் பேருந்து 10 அடி செல்வதற்குள், மற்றொரு பேருந்து உரசியதில் அவர் கீழே விழுந்து, பலத்த காயமடைந்து, உயிரிழந்துவிட்டார். என் கண் முன்னே இந்த விபத்து நேரிட்டது.

அந்த மாணவர் பெயரும் பாலசுப்பிரமணியன்தான். நான் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காகவே, அவர் என்னைத் தள்ளி விட்டுவிட்டு, பேருந்தில் ஏறிச் சென்றார் என்று கருதினேன். இந்த சம்பவம் எனது வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

விட்டுக்கொடுத்துப் போனால், வாழ்க்கை சிறக்கும் என்ற பாடத்தை அந்த சம்பவம் சொல்லிக் கொடுத்தது. அதேசமயம், இறைவன் என் மீது கருணை வைத்துள்ளான் என்றும் உணர்த்தியது.

ஸ்ரீஷீரடி நாக சாயி கோயில்!

எனது தந்தை தீவிர சாய்பாபா பக்தர். கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஷீரடி நாக சாயி கோயிலின் வளர்ச்சியில் பங்கு வகித்ததுடன், அக்கோயிலின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். 1985-ல் அப்பா தவறிய நிலையில், என்னை துணைத் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்தனர். தற்போது வரை துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறேன். இடையில் 6, 7 ஆண்டுகள் தலைவர் பொறுப்பும் வகித்தேன். ஷீரடி நாக சாயி கோயில் சார்பில் ஆன்மிகச் சேவை மட்டுமின்றி, பல்வேறு சமூகச் சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறோம். 2002-ல் கோயில் கும்பாபிஷேகம் பிரம்மாண்ட அளவில் நடைபெற்றது. இக்கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளியில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இலவசமாகப் பயில்கின்றனர். இப்பள்ளியின் செயலராகவும் பொறுப்பு வகிக்கிறேன்.

இதேபோல, சித்தாபுதூர் ஐயப்பன் கோயில், வடகோவை சித்தி விநாயகர் கோயில், ஐயப்பன் கோயில் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளேன். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் லோகபரமேஸ்வரி அம்மன் கோயில், அன்னபூரணி அம்மன் கோயில்களின் தலைவராகவும் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறுப்பு வகித்து வருகிறேன்” என்றார்.

கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவராக 18 ஆண்டுகள், தலைவராக 25 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார் பாலசுப்பிரமணியன்.

இதேபோல, கோவை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், கோவை மாவட்ட சினிமா விநியோகஸ்தர்கள் சங்கம், போத்தனூர் குழந்தைகள்நல குடும்பம் அமைப்பு, வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு என பல்வேறு அமைப்புகளின் தலைவர், செயலர், துணைத் தலைவர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

“அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது, கோவை வந்தார். அப்போது வியாபார சங்கங்களின் பிரதிநிதி என்ற முறையில் நான் நேரில் சென்று சந்தித்தேன். ‘நல்லா தொழில், வியாபாரம் செய்யுங்க. அதேசமயம், தேசப்பற்றும், சமுதாய நோக்கமும் முக்கியம். உலகில் எந்த நாட்டுக்குப் போனாலும், இந்தியாவின் பெருமையைப் பரப்புங்கள்’ என்று அறிவுறுத்தியதை, எப்போதும் மறக்க முடியாது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் எனக்கு நெருங்கிய நண்பர். இதேபோல, அனைத்து அரசியல் கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருந்தாலும், அரசியலில் எவ்வித ஆர்வமும் கிடையாது. 1985-ல் எனக்கு திருமணம் நடைபெற்றது. மனைவி ராதா, மகன் உண்ணி, மகள்கள் சரண்யா, தன்யா. குடும்பத்தினரின் ஒத்துழைப்பே, என்னால் முழுமையாக வணிகத்திலும், பொது வாழ்விலும் ஈடுபட முடிகிறது. அதேபோல, எனது சகோதரர் எஸ்.ரவீந்திரனும் என்னோடு சேர்ந்து, தொழிலில் ஈடுபட்டுள்ளார். கூட்டுக்குடும்ப முறை குறைந்து வரும் நிலையில், நாங்கள் கூட்டுக்குடும்பமாக இருக்கிறோம் என்பதே பெருமையாக உள்ளது” என்றார்.

முதியோர் இல்லம் கட்டுவதே லட்சியம்!

“பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தி, சாதித்துள்ளீர்கள். இளைய தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டோம். “இப்போதெல்லாம் குறுகிய காலத்திலேயே உயர்ந்த நிலைக்கு வந்துவிட வேண்டுமென நினைக்கிறார்கள். இவ்வாறு தடாலடியாக உயர்வது நிலையாக இருக்காது. கடின உழைப்புதான் நிரந்தர வெற்றியைத் தரும். அதேசமயம், நேர்மையான முறையில் தொழில்புரிய வேண்டும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கைதான் தொழில், வணிகத்தை நிலைத்திருக்கச் செய்யும். முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அடுத்தவர் மனம்நோகும்படி நடந்துகொள்ளக் கூடாது. நம்பியவர்களுக்கு துரோகம் செய்துவிடக் கூடாது. இந்தப் பண்புகள் வாழ்வில் வெற்றியைத் தருவதுடன், வெற்றியை நிலையாக இருக்கச் செய்யும். அதேபோல, தோல்வியடைந்தால் துவண்டுவிடக் கூடாது. நவீன அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்று, அதை செயல்படுத்த வேண்டும்” என்றவரிடம், “உங்கள் லட்சியம் என்ன?” என்று கேட்டதற்கு, “நம்மை இந்த உலகுக்கு கொண்டுவந்த பெற்றோரை, நாம் வளர்ந்த பின் உதாசீனப்படுத்திவிடுகிறோம். இதனால் ஆதரவும், துணையுமின்றி முதியோர் பலரும் தவிக்கின்றனர். எனவே, பெரிய அளவில் முதியோர் இல்லம் கட்டி, வயதானவர்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்பதே எனது லட்சியம்” என்றார் நெகிழ்ச்சியுடன் பாலசுப்பிரமணியம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close