[X] Close

மா.சுப்பிரமணியன், அவரது மனைவியை ஜூன் 18 வரை கைது செய்யக்கூடாது; அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


18

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 09:00 am
  • அ+ அ-

அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவியை வரும் ஜூன் 18 வரை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.பார்த்திபன் கிண்டி போலீஸில் கடந்த மே 31-ம் தேதி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ல் நடந்த தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டேன். திமுக சார்பில் போட்டியிட்ட மா.சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், கிண்டி தொழிலாளர் காலனியில் அவரது மனைவி காஞ்சனா பெயரில் உள்ள வீடு, சிட்கோ நிறுவனத்திடமிருந்து பெற்றதாகக் கூறியுள்ளார். உண்மையில் அந்த நிலம் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு கடந்த 1959-ம் ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. எஸ்.கே.கண்ணன் கடந்த 2015-ம் ஆண்டு இறந்து விட்டார். மா.சுப்பிரமணியன் கடந்த 2006 முதல் 2011 வரை சென்னை மாநகர மேயராக பதவி வகித்தார்.

அப்போது சில முக்கிய ஆவணங்களை திருத்தி எஸ்.கே.கண்ணனின் வாரிசாக தன் மனைவி காஞ்சனா பெயரை சேர்த்துள்ளார். பின்னர் அந்த நிலத்தை காஞ்சனா பெயருக்கு மாற்றி அரசு நிலத்தை மோசடி செய்துள்ளார்.

ஆனால், மா.சுப்பிரமணியனின் மனைவி காஞ்சனாவின் பாஸ்போர்ட்டில் அவரது தந்தை பெயர் சாரங்கபாணி என உள்ளது. எனவே போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை கையகப்படுத்திய குற்றத்துக்காக மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் மா.சுப்பிரமணியன் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும் அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜனும் ஆஜராகினர்.

முன்ஜாமீன் தரக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்து புகார்தாரரான பார்த்திபன் தரப்பிலும் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 18-க்கு தள்ளிவைத்தார். அதுவரை மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனாவை கைது செய்யக்கூடாது' என போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close