[X] Close

இருப்பிட சான்று பெற 15 நாட்களாக சென்றவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு


15

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 08:58 am
  • அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த பொதட்டூர்பேட்டை பஜார் தெருவைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணன்(48). இவரது மகன் நந்தகுமார் உயர் கல்வியில் சேர இருப்பிடச் சான்று தேவைப்பட்டது.

ஆகவே, கிருஷ்ணன், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருப்பிடச்சான்று கேட்டு, பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். தன் விண்ணப்பம் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால், கிருஷ்ணன், நாள்தோறும் வட்டாட்சியர் அலுவலகம் வந்து, காலை முதல் மாலை வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றதாகக் கூறப்படுகிறது.

இச்சூழலில், வழக்கம்போல் இருப்பிடச் சான்றிதழ் பெறுவதற்காக நேற்று காலை பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார் கிருஷ்ணன். ஆனால், ஜமாபந்தி கூட்டம் நடைபெற்று வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்க முடியாமல், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் சோர்வாக அமர்ந்திருந்தார்.

அப்போது, மதியம் 2 மணி அளவில் கடும் வெயில் வாட்டிவதைத்த நிலையில், கிருஷ்ணன் மயக்கமடைந்து, மரத்தடியிலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த பள்ளிப்பட்டு போலீஸார், கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், ’இருப்பிடச் சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் செய்துவந்த வருவாய்த் துறை அதிகாரிகள்தான், கிருஷ்ணனின் உயிரிழப்புக்கு காரணம்’ என, கிருஷ்ணனின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close