[X] Close

திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில் 4 வழிப் பாதைக்காக 460 பனைமரம் அகற்றம்?- இயற்கை அடையாளத்தை இழப்போம் என பொதுமக்கள் வருத்தம்


4-460

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 08:56 am
  • அ+ அ-

திருப்போரூர் பகுதிக்கு செங்கல்பட்டிலிருந்து செல்ல இருவழிப்பாதை அமைந்துள்ளது. சுமார் 25 கி.மீ., தொலைவு கொண்டுள்ள இச்சாலை மாநில நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இந்நிலையில், வாகனப் பெருக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக திருப்போரூர்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையை 4 வழிப்பாதையாக மாற்றியமைக்க மத்திய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.

இதன்பேரில், மேற்கண்ட சாலையை 4 வழிச்சாலையாக அமைக்க கடந்த 2018-19-ம் ஆண்டு ரூ.126.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, முதற்கட்ட சாலைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், தற்போதுள்ள 7 மீட்டர் அகலம்கொண்ட சாலை 18.62 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, அச்சாலையில் உள்ள 18 சிறு குழாய் பாலங்கள் மற்றும் 4 சிறுபாலங்களை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கூடுதலாக 4 இடங்களில் புதிய சிறுபாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

நான்கு வழிப்பாதையாக சாலை மாற்றியமைக்கப்பட உள்ளதால், சாலையோரத்தில் பல ஆண்டுகளாக திருப்போரூர் கிராமங்களின் அடையாளமாக திகழ்ந்து வரும் சுமார் 460 பனை மரங்கள் உட்பட 1,300 மரங்கள் அகற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது. பனைமரங்கள் வெட்டப்பட உள்ளதால், இப்பகுதி கிராமங்கள் தங்களின் பல ஆண்டுகால இயற்கை அடையாளத்தை இழப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பெருந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் கூறியதாவது: தற்போதுள்ள இருவழிச் சாலையால் பல்வேறு இடங்களில் வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட சாலை 4 வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இப்பகுதி கிராமங்களின் அடையாளமாக திகழ்ந்துவரும் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவது வேதனையளிக்கிறது. இதனால், சிறிய கன்றுகளாக உள்ள பனைமரங்களை வேறோடு எடுத்து, வேறு இடத்தில் நடுவதற்கும் மற்றும் புதிதாக அமையவிருக்கும் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு, வளரும் வரையில் முறையாகப் பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது: மத்திய நெடுஞ்சாலைத் துறை நிதி ஒதுக்கியதின் பேரில் திருப்போரூர்-செங்கல்பட்டு சாலை 4 வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது. இதற்காக 460 பனை மரங்கள் உட்பட 1,300 மரங்கள் அகற்றப்பட உள்ளன. சாலை வடிவமைப்பைப் பொறுத்து அகற்றப்பட உள்ள மரங்களின் எண்ணிக்கை குறையலாம். சாலைப் பணிகளுக்காக மரங்களை அகற்ற வருவாய்த் துறை மற்றும் வனத்துறையிடம் முறையான ஆவணங்கள் அளிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அகற்றப்பட உள்ள ஒவ்வொரு மரத்துக்கு பதிலாக 3 மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close